திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து ஆற்றிய உரை:-
அதிமுக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா கண்ணை இமை காப்பது போல் காத்து, இருபெரும் தலைவர்களும் இரவு, பகல் பாராமல் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வளர்த்த இயக்கம். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக இயக்கம். ஆனால் திமுக ஒரு குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் சேர்மன் ஸ்டாலின். அதன் இயக்குனர்கள் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன். அந்தக் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க இந்த நால்வர் மட்டுமே தேர்தல் பிரசாரத்திற்கு செல்கின்றனர். கட்சிக்காக உழைத்தவர்கள் பிரசாரத்திற்குப் போனால் மக்களிடத்தில் செல்வாக்கு ஏற்பட்டு கட்சியைக் கைப்பற்றி விடுவார்களென்ற பயத்தினால் அவர்களை அனுப்புவதில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் தயாநிதிமாறனுக்கும் திமுக கட்சிக்கும் என்ன சம்பந்தம்? என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என ஏற்கனவே ஸ்டாலின் சொல்லியுள்ளார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது என்னுடைய அப்பா திமுக தலைவராக இருந்தாலும் நான் அந்தக் கட்சியில் இல்லையென்று இருவருமே வாக்குறுதி கொடுத்துவிட்டு, அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் வரவேண்டுமென்ற நினைக்கும் ஒரே கட்சி திமுக தான்.
அதிமுக-வில் அப்படி இல்லை. இங்குள்ள கிளைச் செயலாளர்கூட உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறலாம், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், ஏன் முதலமைச்சராகக்கூட ஆகலாம். நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். எனவே, வேளாண் பெருமக்களும் வேளாண் தொழிலாளிகளும் எவ்வளவு கஷ்டப்படுவார்கள், எப்படி உழைப்பார்கள் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். ஆனால் ஸ்டாலின், அவருடைய அப்பா திமுக தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்ததனால் பதவிக்கு வந்தவர். ஆனால், நான் உழைப்பாளிகளோடு இருந்து உயர்ந்து இருக்கிறேன். நாட்டு மக்களுடன் பழகி, அவர்களுடன் வாழ்ந்து, அதன் மூலமாக மக்களின் பிரசனைகளை உணர்ந்து, அதற்கேற்றவாறு எங்கள் அரசாங்கம் திட்டங்களைத் தீட்டி நாட்டு மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் திமுக தலைவர் அலுங்காமல் ஊர் ஊராக வந்து, ஒரு பெட்டியை வைத்து அதில் மனுக்களைப் போடச் சொல்லி அந்தப் பெட்டியை சீல் செய்து எடுத்துச் சென்று விடுவார், மூன்று மாதங்கள் கழித்து முதலமைச்சரானவுடன் பெட்டியை உடைப்பாராம்.
இந்தியாவில் இப்படி ஒரு தலைவரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? ஸ்டாலின் அவர்களே இதேபோல், 2019ஆம் ஆண்டு ஊர் ஊராகச் சென்று திண்ணையில் பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து மக்களிடம் குறைகளை கேட்டீர்களே, அந்தக் குறைகளை நீங்கள் தீர்த்து வைத்தீர்களா? 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, இதே போல், மக்களை ஏமாற்றி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்றீர்கள். அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா? அன்று மக்களிடம் வாங்கிய மனுக்கள் என்னவாயிற்று? என்று நான் கேட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஊர் ஊராகச் சென்று மக்களிடத்தில் மனு வாங்கினீர்களே, அதைப்போல, இப்போது வாங்கிய மனுக்களும் அதேபோலத்தான் இருக்கும். ஆனால், அண்ணா திமுக அப்படியல்ல, எதைச் சொல்கின்றதோ அதை செய்து முடிக்கின்ற ஒரே கட்சி அண்ணா திமுக கட்சி.
வேளாண் பணிகளுக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பாசன நீர் கடைமடை வரை செல்ல வேண்டும் என்பதற்காக கால்வாய் புனரமைப்பு செய்துள்ளோம். நானும் ஒரு விவசாயி. இன்றளவும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்தவன். விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் இரண்டு கண்களைப்போல பாதுகாப்பது தமிழக அரசு.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். இருபெரும் தலைவர்களுக்கு நாம் தான் வாரிசுகள். நமக்காகத்தான் உழைத்தார்கள், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார்கள். திமுக தலைவர் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தவர். கருணாநிதி, அவருக்குப்பின் ஸ்டாலின், இப்போது உதயநிதி என வீட்டுமக்களுக்காக செயல்படுகின்ற கட்சி தி.மு.க. அவர்களுக்கு நாட்டு மக்களை விட வீட்டு மக்கள் தான் பெரிது.
நான் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்தவன். படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆனால், ஸ்டாலின் அப்படிகிடையாது. அவரது அப்பா முதலமைச்சர். அதன் மூலமாக அவர் பதவிக்கு வந்தார். ஆனால் நான் அப்படி அல்ல, உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதிமுக கட்சி நாட்டுமக்களுக்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட இயக்கம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...