டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்: முதல்வர்

நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

News image
Updated On :2 ஜனவரி 2021, 11:54 am

DIN

நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘நிவர்’ புயல் 25.11.2020 மற்றும் 26.11.2020ல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு ‘புரெவி’ புயலின் தாக்கத்திற்கு உள்ளானது. எனது தலைமையிலான தமிழ அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களின் போது, மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

எனினும், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்கள் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்று மற்றும் கன மழையின் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம், சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பல உட்கட்டமைப்புகளுக்கு பெரும்சேதம் ஏற்பட்டது. இதுவன்றி, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனது அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக புயல் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் இயல்பு நிலை உடனடியாக திரும்பியது.

இப்புயலினால் ஏற்பட்ட பயிர் சேதத்தினை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். 8.12.2020 மற்றும் 9.12.2020 ஆகிய நாட்களில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது போல், ‘புரெவி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு 28.12.2020 முதல் 30.12.2020 வரை ஆய்வு செய்தது. 

‘நிவர்’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 641.83 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 3108.55 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 3,750.38 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது. மேலும், ‘புரெவி’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 485 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 1,029 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 1,514 கோடி ரூபாய் தேவைப்படும் என தெரிவித்து மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளின் மீது எப்பொழுதும் மிகுந்த அக்கறை கொண்ட நான், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களின் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டும், வேளாண்பெருமக்கள் அதிக உற்பத்தி செலவு செய்து, பேரிடரால் பெரும்பாதிப்பு அடைந்துள்ளதை கருத்தில் கொண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி,

 மானாவரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான 13,500/- ரூபாய் என்பதை, 20,000/- ரூபாயாக உயர்த்தியும்,
 மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7410/- ரூபாய் என்பதை, 10,000/- ரூபாயாக உயர்த்தியும்,
 பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18,000/- ரூபாய் என்பதை, 25,000/-ரூபாயாக உயர்த்தியும் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை, தமிழ்நாடு அரசு வழங்கும்.

மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது. இந்த பேரிடரில், அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால் 2 எக்டேர் என்ற உச்சவரம்பை தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் நான்ஆணையிட்டுள்ளேன்.

இதனைத் தொடர்ந்து ‘நிவர்’ மற்றும் புரெவி புயல்களின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 5 லட்சம் விவசாய பெருமக்களுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும். இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 7.1.2021 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.