இராமநாதபுரம் மாவட்டம் ஒரு வறட்சியான மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் பசுமையாகவும், செழிப்பாகவும் ஆக வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு காவேரி – குண்டாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது. இத்திட்டத்தை பல கட்டங்களாக பிரித்து செயல்படுத்த உள்ளோம். முதல் இரண்டு பிரிவுகளை பிரித்து ஒப்பந்தம் விட்டுவிட்டோம். குறுகிய காலத்திற்குள் இப்பணிக்கு அடிக்கல் நாட்டப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். காவேரி – குண்டாறு திட்டம் நிறைவேறுகின்ற போது, பரமக்குடியில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பும். இதனால் நிலத்தடி நீர் உயர்வதோடு, வேளாண் பெருமக்களுக்கு தேவையான நீரும், குடிப்பதற்கு தேவையான நீரும் கிடைக்கும். இத்திட்டம் 14,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை தொடங்கி நிறைவேற்றி முடிக்கின்ற போது இந்தப் பகுதி மக்கள் செல்வ செழிப்போடு வாழ்வார்கள். எங்களுடைய அரசு எதை சொல்கிறதோ, அதை செய்து காட்டும், செய்து முடிக்கும். நானும் ஒரு விவசாயி. இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றேன். விவசாய பணிகள் அனைத்தும் எனக்கு தெரியும். என் தந்தை அடிக்கடி சொல்வார், நீ வேளாண் பணியை பற்றி நன்கு தெரிந்திருந்தால் தான் வேலை செய்பவர்கள் நீ சொல்கிறபடி கேட்பார்கள். இல்லையென்றால் அவர்கள் சொல்கின்றபடி தான் நீ கேட்கவேண்டி இருக்கும் என்று சொல்வார். அதனால் நான் வேளாண் பணிகளை முழுமையாக கற்று, எந்த காலத்தில், எந்த பயிரை பயிர் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவன். எந்த வகையான பூச்சி தாக்குதல் வருகிறது, அதற்கு என்ன வகையான மருந்துகள் அடிக்க வேண்டும், எப்படி பயிரை காக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவன்.