சூரியனை வழிபடும் உன்னதத் திருநாள்!
"ராஜ கிரகம்'' என்று அழைக்கப்படும் சூரியனை வழிபடும் திருநாளாக பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது.


"ராஜ கிரகம்'' என்று அழைக்கப்படும் சூரியனை வழிபடும் திருநாளாக பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் வழிபாட்டை முன்னிட்டு இரண்டு தெய்வங்கள் வழிபடப்படுகின்றனர். ஒருவர் இந்திரன்; மற்றவர் சூரியன்.
சூரியனை வழிபடுவது நம் நாட்டின் தொன்மையான மரபாகும். வேதங்களிலேயே இதற்குச் சான்றுகள் உண்டு. "உலகத் தோற்றத்தின்போது முதன் முதலில் 'ஓம்' என்ற ஓசை உண்டாயிற்று. அந்த ஓசையிலிருந்து ஒளி மயமான சூரியன் தோன்றினான்'' என மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.
"காசிபருக்கும், அதிதிக்கும் பிறந்த விசுவவான் முதலிய பன்னிரண்டு புத்திரர்களே பன்னிரு சூரியர்கள் ஆனார்கள்'' என்று பாரதம் கூறுகிறது.
சூரியன், நமது கண்கண்ட தெய்வம். சூரியன் ஏறிவரும் தேருக்கு ஒரே ஒரு சக்கரம்தான் உண்டு. அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. ஏழு குதிரைகளும் வெவ்வேறு வகையான ஏழு நிறங்கள் உடையவை. இக்குதிரைகளை ஓட்டும் சாரதி, அருணன் என்ற பெயருடையவன்.
சூரியனின் வேறு பெயர்கள்
சூரியனைக் குறிக்க அருக்கன், ஆதித்தன், கதிரவன், கமல நாயகன், கனலி, ஞாயிறு, தினகரன், பகலவன், பரிதி, பானு, மார்த்தாண்டன், வெங்கதிரோன், வெய்யோன் என்று பல பெயர்கள் உண்டு.
தமிழ் மாதங்கள் 12-ல் ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயனக் காலம் என்றும், தை முதல் ஆனி வரை உத்தராயண காலம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்தராயணத்தில் சூரியன் வடக்கு நோக்கி நகரும் மாதமான மகர மாதம் முதலில் வருகிறது. இதன் முதல் நாள், "மகர சங்கராந்தி' என்றும், "பொங்கல்' என்றும் நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது.
போகிப் பண்டிகை
"பழையனவற்றை நினைத்துக் கொண்டிராமல் நன்மை தரக்கூடிய புதியனவற்றை வரவேற்றுப் போற்ற வேண்டும்'' என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இது இந்திர விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. போகி என்றால் "போகமுடையவன்'' என்றும் ஒரு பொருள் உண்டு. இப்பெயர், இந்திரனைக் குறிக்கும். அவன் அருளால் மழை பெய்து பயிர் விளைந்ததைக் குறிக்கும் வகையில் இந்திரனுக்குரிய விழாவாகப் போகி விளங்குகிறது.
அன்று பாய், முறம் போன்ற பழைய பொருள்களை தீ மூட்டி எரிப்பது மரபு. "போக புத்தியை (தாழ்ந்த உலகியல் ஆசைகளை) ஞான அக்னியால் எரிக்க வேண்டும்'' என்ற கருத்தே போகிப் பண்டிகையின் மூலம் உணர்த்தப்படுகிறது.
நின்று போன இந்திர பூஜை
கண்ணபிரான் கோகுலத்தில் வளர்ந்த நாள்களில் இந்திர பூஜையை அவர் நிறுத்திவிட்டார். இதனால் கோபம் அடைந்த இந்திரன், கோகுலத்தின் மீது ஏழு தினங்கள் பெரு மழையைப் பொழியச் செய்தார். அப்போது கோவர்த்தன கிரியைக் குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து கோகுலத்து மக்களைக் காத்தார் கிருஷ்ண பரமாத்மா. தன் முயற்சிக்கு ஏற்பட்ட தோல்வியால் கர்வ பங்கம் அடைந்த இந்திரன், கண்ணன் பாதம் பணிந்தான். அந்தத் திருநாளே "போகி' என்றொரு கருத்து உண்டு.
ராஜகிரகம்
வான மண்டலத்தைப் பற்றி நம் முன்னோர் ஞான திருஷ்டியால் அறிந்து வைத்திருந்த விஷயங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. வராஹமிகிரர், ஆரிய பட்டர், பாஸ்கரர் போன்றோர் பற்பல நூற்றாண்டுகளுக்கே முன்னர் வான இயலில் வல்லுநர்களாகத் திகழ்ந்துள்ளனர். சூரியனும், மற்ற கிரகங்களும் ஜோதிடத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தமிழ்நாட்டில் சூரிய வழிபாடு
தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாக நம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. மார்கழி கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளன்று மாவிலை, வேப்பிலை, காப்புச் செடி ஆகியவற்றை வீட்டுக்கூரையின் கிழக்குப் புறம் வைப்போம். இதற்கு, "காப்புக் கட்டுதல்' என்று பெயர். காப்பு வாழ்க்கைக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அன்றைய தினம், வீட்டு வாயிலில் அழகிய கோலங்கள் இட்டு மகிழ்வார்கள்.
பொங்கல்
அன்று மங்கலப் பொருள்களான பால், மஞ்சள், கரும்பு, புது அரிசி, வெல்லம் ஆகியவற்றை வைத்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்குப் படைத்து வழிபட வேண்டும்.
மாட்டுப் பொங்கல்
விவசாயப் பணிகளுக்கும், நமது அன்றாட உணவுக்கும் நமக்கு உறுதுணையாக உள்ள மாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பதே மாட்டுப் பொங்கல். "கால்நடைகளே நமது மூதாதையரின் செல்வம்' என்று பண்டைய இலக்கியங்களின் மூலம் அறிய முடிகின்றது.
கனுப் பண்டிகை
மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கனுப் பண்டிகையில், "மஞ்சள் குங்குமத்துடன் நிறைந்த சுமங்கலியாக, நிர்மலமான மனதுடன் தானும், அதைப் போலவே வளமான வாழ்க்கையுடன் உடன் பிறந்த சகோதரனும் நீடுழிவாழ வேண்டும்'' என்று பஞ்சபூதங்களிடம் மங்கையர் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அன்றைய தினம், முதல் நாள் செய்த சர்க்கரைப் பொங்கலுடன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறச் சாதங்கள், தயிர்ச் சாதம் போன்றவற்றை காக்கைக்கு அர்ப்பணிப்பார்கள்.
காணும் பொங்கல்
உறவினர், நண்பர்களைக் கண்டு நலம் விசாரிக்கும் திருநாளே "காணும் பொங்கல்'. அன்று பலர் உல்லாசப் பயணங்களை மேற்கொள்வர். கிராமப் பகுதியில் மாடுகள் மேய்வதற்குக் காரணமாக இருந்த வயல் புறங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் காணும் பொங்கல் தினத்தில் வயல்வெளிகளில் பொங்கலிட்டுப் படைப்பர்.
இப்படி தூய்மை, வழிபாடு, உயர்ந்த சிந்தனை போன்றவை நம்மிடையே நிலவச் செய்யும் பண்டிகையாக பொங்கல் விளங்கி வருகிறது. பொங்கல் அன்று சூரிய பகவானை வழிபட்டு நாம் அனைவரும் மங்கலங்கள் அனைத்தும் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...