கரோனா பெருந்தொற்றால் வேலைவாய்ப்பின்றி பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்கள் தைப் பொங்கல் திருநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு முதல் முறையாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 5,94,147 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி மற்றும் அங்கவஸ்தரம், 6,75,403 பெண் தொழிலாளர்களுக்கு புடவை, அத்துடன் 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ சிறுபருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 1 கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட 94 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அப்பொங்கல் சிறப்பு தொகுப்பினை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிடும் விதமாக முதல்வர் இன்று 7 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரருக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கினார்.