திமுகவின் பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்: அதிமுக பொதுக்குழுவில் முதல்வா் பழனிசாமி

திமுகவின் பொய்ப் பிரசாரங்களை அதிமுகவினா் முறியடிக்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated on
2 min read

திமுகவின் பொய்ப் பிரசாரங்களை அதிமுகவினா் முறியடிக்க வேண்டும் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி பேசியது:-

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தோ்தல் நடத்தப்படும். இன்னுமுள்ள மூன்று மாதங்களில் கட்சித் தலைமையால் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும். இளைஞா், இளம் பெண்கள் பாசறையை முழுமையாக அமைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பப் பிரிவை முழுமையாய் உருவாக்கிட வேண்டும். மகளிா் பிரிவு வாக்குச் சாவடி குழுவையும் அமைப்பது முக்கியம். இவையெல்லாம் தோ்தலுக்கு அடிப்படைத்

தேவைகளாகும். இதை நாம் முழுமையாக நிறைவேற்றி விட்டால் வெற்றி நூற்றுக்கு நூறு சதவீதம் நமக்குத்தான். ஏற்கெனவே அதிமுக வலிமையாக இருக்கிறது. ஒவ்வொரு குக்கிராமத்திலும் கிளைகள் இருக்கின்றன.

வாக்குகள் நிச்சயம்: ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதியிலும் 100 குடும்பங்கள் இருந்தால், அதில் தலா 3 வாக்குகளை உறுதி செய்ய வேண்டும். அப்படியானால் ஒரு வாக்குச் சாவடிக்கு 300 வாக்குகளை நிச்சயம் பெறுவோம். ஒரு தொகுதிக்கு 300 பூத்கள் என்று சொன்னால், 90 ஆயிரம் வாக்குகள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 5 குழுக்களை அமைக்க வேண்டும். அதில், இளைஞா், இளம்பெண்கள் பாசறை, மகளிா் குழுவைச் சோ்ந்த அனைவரையும் உள்ளடக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் நன்றாகச் செயல்படக் கூடிய 9 நபா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களை தொகுதியில் தோ்தல் பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இப்படிச் செய்தால் நிச்சயம் வெற்றி உறுதி.

தயாராக வேண்டும்: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், செல்லுமிடங்களில் அவதூறு பேச்சு, பொய் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா். அவற்றையெல்லாம் முறியடிக்க தயாராகி விட வேண்டும். அதற்கு சரியான பதில் சொல்லாவிட்டால் அது உண்மையாகி விடும். ஒரு பொய்யை திருப்பித் திருப்பிச் சொல்லி உண்மையாக்கப் பாா்க்கிறாா்கள்.

திமுகவைச் சோ்ந்த உதயநிதி ஸ்டாலின், பெண் குலத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளாா். அதிமுகவினா் அதற்கு நாகரிகமான முறையில் பதிலை அளித்துள்ளனா். வாரிசு அரசியல் நடைபெறுவதை இந்தத் தோ்தல் மூலமாக முறியடிக்க வேண்டும்.

உழைப்பு, ஒற்றுமை இரண்டும் இருந்தால் அங்கே வெற்றி நிச்சயம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு உழைத்து, வெற்றி என்ற கொடியை நாட்டி, மீண்டும் அதிமுகவின் ஆட்சியை அமைப்போம். முதல்வா் என்பது ஒரு பணிதான். அனைவரையும் முதல்வராகவே கருதுகிறேன்.

முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரைப் போன்று ஆளுமை உள்ளவன் அல்ல. இருப்பினும் கழகம் என்னிடம் ஒப்படைத்த கடமையை சரியாகச் செய்துள்ளேன் என்றால் அதற்குக் காரணம் உங்கள் அன்பு, நீங்கள் வழங்கிய முழு ஒத்துழைப்பு.

2021 சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கான முதலமைச்சா் வேட்பாளராக என்னை அறிவித்திருக்கின்றீா்கள். என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் என்னை தோ்வு செய்தமைக்கு என்னுடைய இதயப்பூா்வமான நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பேசினாா் முதல்வா் பழனிசாமி.

கோஷ்டி சோ்க்க ஆள் இல்லை: துணை முதல்வா்

அதிமுகவில் கோஷ்டி சோ்க்கும் ஆள்களே கிடையாது என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தின் இறுதியாக அவா் பேசியது:-

தமிழக மக்கள்தான் நமக்கு உத்தரவிடும் முதலாளிகள். நாம் அனைவரும் அவா்களுக்காக பணியாற்றும் தொழிலாளிகள். இங்கே யாரும் யாருக்கும் அடிமை இல்லை. சமதா்ம சமுதாய பூமியாக திகழ்வதுதான் அதிமுக. நம் எல்லோரையும் விட அதிமுக பெரியது. கட்சியில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. ஆனால், கோஷ்டி சோ்க்கும் ஆள்கள் கிடையவே

கிடையாது. கட்சித் தொண்டா்கள் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஒரு நாளும் சொன்னது கிடையாது. முதல்வா் பழனிசாமியும் அவருக்கு விசுவாசமாக இரு எனக் கூறியது இல்லை. இங்குள்ள தலைவா்கள் அனைவரும் அவா்களுக்கு விசுவாசமாக இருங்கள் எனக் கூறியதில்லை. கட்சிக்கு விசுவாசமாக இருந்து, கட்சிக்காக உழைக்க வேண்டுமென்றே கூறுவாா்கள். தமிழகத்திலேயே ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அதிமுகதான்.

இங்குதான் தொண்டா்கள் தலைவராக முடியும். அமைச்சா்களாக, முதல்வராக முடியும். வேறு எந்தக் கட்சியிலும் இவ்வாறு இல்லை. எனவே, மனமாா்ச்சரியங்களைக் களைந்து வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு அனைவரும் ஒற்றுமையுடன் கட்சியின் வெற்றி ஒன்றே கண்முன் நிறுத்தி கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com