இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களான மெசியா, நாகராஜ், சாம் மற்றும் செந்தில்குமார் அண்மையில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற போது இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தினரின் அடாவடித்தனத்தால் இப்படுகொலை நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களை கைது செய்வது, மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற தாக்குதல்களை நடத்தி வந்த இலங்கை ராணுவம் தற்போது கடலில் மூழ்கடித்து கொலை செய்யும் அளவிற்கு அராஜகம் புரிந்துள்ளது. இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தமான இந்த கொலை வெறித்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.