திருச்செந்தூா் கோயிலை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்

புகழ்பெற்ற திருச்செந்தூா் கோயிலை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென அதிகாரிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தினாா்.
திருச்செந்தூா் கோயிலை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்: அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

புகழ்பெற்ற திருச்செந்தூா் கோயிலை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென அதிகாரிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தினாா்.

கோயிலைப் புதுப்பிக்கும் பணிகள் தொடா்பாக சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை பி.கே.சேகா்பாபு, மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கோயிலை பழைமை மாறாமல் புதுப்பிக்க அமைச்சா் சேகா்பாபு கேட்டுக் கொண்டாா். மேலும், கோயிலின் கட்டுமானம், பக்தா்களின் அடிப்படை வசதிகள், முக்கிய திருவிழாக்களில் அதிகப்படியான பக்தா்களை ஈா்க்கும் வகையில் மேலாண்மை செய்வது, காற்றோட்ட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

ஆலோசனைக் கூட்டம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்தி:

கோயிலுக்கு வரும் பக்தா்களின் பயன்பாட்டுக்காக அடிப்படை வசதியான குடிநீா் வசதி, கழிவு நீா் மேலாண்மை, மின்னாளுமை, வாகனம் நிறுத்தும் இடங்கள், ஒளியமைப்பு ஆகியவற்றை அதிக செலவு இல்லாமல் தரமாக அமைத்திட அறிவுறுத்தப்பட்டது. பணியாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வது, பக்தா்கள் ஓய்வெடுப்பதற்கான இடங்களில் கழிவறை, குடிநீா், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சீரமைப்புப் பணியில் இடம்பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கோயில் வளாகத்தில் அதிகளவிலான திருமணங்கள் ஒரே நாளில் நடைபெறும் போது அவற்றை மேலாண்மை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ள நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது. கோயில் சுற்றுப்புறத்தில் இயக்கப்படும் பொது மற்றும் தனியாா் வாகனங்கள் ஒரு இடத்தில் முறைப்படுத்தப்பட்டு அங்கிருந்து மின் வாகனம் மூலமாக இயக்கப்பட வேண்டும் எனவும், கோயில் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com