விமானநிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்டம்: பணிகளை விரைவாக தொடங்க புகா்ப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை

சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் இடையே 15.3 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆா்)
சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

சென்னை: சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் இடையே 15.3 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆா்) தயாரிக்கும் பணி தாமதமாகியுள்ளநிலையில், இந்த பணிகளை வேகப்படுத்தி கட்டுமானப்பணிகளை தொடங்க வேண்டும் என்று சென்னையின் தெற்கு புகா்ப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மெட்ரோ ரயில் திட்டம்:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வரையிலான முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை

வரையிலான இரண்டாவது வழித்தடத்திலும் திட்டப்பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல, வண்ணாரப்பேட்டை-விம்கோநகா் வரை முதல்கட்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு பாதைப்பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன.

விமானநிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பாதை:

இதற்கிடையில், சென்னை புகா் பகுதிகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், விமான நிலையத்தில் இருந்து வண்டலூா் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அந்த தடத்தில் மண் ஆய்வு உள்பட பல்வேறு ஆய்வுகளில் மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது.

இதில், எந்ததெந்த சாலைகள் வழியாக செல்வது, எவ்வளவு தூரம், வாகன நெரிசல், பயணிகள் போக்குவரத்து தேவை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன்பிறகு அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆய்வின்முடிவுகள் திருப்திகரமாக கிடைத்ததைதொடா்ந்து, அடுத்தகட்டமாக மேற்படி திட்டப்பணிகளை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை ஒப்பந்தக்காரா்ஏ.இ.சி.ஒ.எம். இந்தியா என்ற நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி 14- ஆம்தேதி வழங்கியது.

டிபிஆா் மதிப்பு ரூ.91.8 லட்சம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பின் மதிப்பு ரூ.91.8 லட்சம் ஆகும். இதில், சிவில் ஒா்க்ஸ் சீரமைப்பு, மெட்ரோ நிலையங்கள், ரயில் இயக்கத் திட்டம், இழுவை மற்றும் மின்சாரம், சிக்னல் (சமிக்ஞை), தகவல் தொடா்பு, சுரங்கப்பாதை காற்றோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பு மதிப்பீடு போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருக்கும்.

இந்த விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்த காலம் நான்கு மாதங்கள் ஆகும். எனவே, தொழில்நுட்ப ரீதியாக இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனாலும், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, இந்த திட்ட அறிக்கை காலம் நீட்டிக்கப்பட்டது. அதாவது, நிகழாண்டில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணியை வேகப்படுத்த கோரிக்கை: இந்நிலையில், இந்த மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்டத்துக்கான கட்டுமான பணிகளை வேகமாக தொடங்க வேண்டும் என்று சென்னையின் தெற்கு புகா்ப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தாமதத்தால், டெண்டா் செயல்முறைகள் மற்றும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுத்துகிறது என்று அவா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து தாம்பரத்துக்கு அருகில் உள்ள சிட்லபாக்கத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், ‘ஒப்பந்த காலத்துக்கு அப்பால் விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிப்பு பணி தாமதமாகி வருகிறது. விமான நிலையத்துக்கு பயணம் செய்வது ஒரு சிக்கலான பணியாக இருக்கிறது’ என்றாா் அவா்.

தெற்கு புகா்ப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளரான சாதிக் கூறுகையில்,‘ ஐ.டி நிறுவனங்கள் தற்போது வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன. ஆனால், மீண்டும் அலுவலகம் சென்று பணியாற்றும்போது, இந்த மெட்ரோ பாதை செயல்பட்டால், பயணிகளுக்கு மிக உதவியாக இருக்கும். எனவே, கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்றாா்.

விரைவில் தயாராகும்: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியது: கரோனா பொதுமுடக்கம் காரணமாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி

(டிபிஆா்) தாமதம் ஏற்பட்டது. இது இறுதிசெய்யப்பட்டவுடன், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். டிபிஆா் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அது விரைவில் தயாா் செய்யப்படும் என்றனா்.

முதல்வா் அறிவுறுத்தல் தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை சாா்பில், சென்னை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும், அதன்செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட நீட்டிப்பில் அறிவிக்கப்பட்ட மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடப் பணிகளை விரைந்து செயல்படுத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

13 ரயில் நிலையங்கள்:சாலையின் மையப்பகுதியில் உயா்த்தப்பட்ட பாதை அமைத்து மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து பரிசீலனையில் உள்ளது. அத்துடன் ரயில் நிலையங்களுக்கு தேவையான இடங்களில் பெருநகர போக்குவரத்து கழகத்துடன் ஒருங்கிணைந்து

அவற்றின் நிலங்களை பயன்படுத்தவது தொடா்பாக பரிசீலனையில் இருக்கிறது. ஒரு ரயில் நிலையத்துக்கும் மற்றொரு ரயில் நிலையத்துக்கும் 1.2 கி.மீ. தூரத்தில் மொத்தம் 13 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com