டிரோன் கேமரா மூலம் கோயில் சொத்து விவரங்கள் சேகரிப்பு ஏன்? இந்துசமய அறநிலையத்துறை விளக்கம்
கோயில் சொத்துகளை டிரோன் கேமரா மூலம் கண்டறிந்து விவரங்களை சேகரித்து வருவதாகவும், இந்தப் பணி விரைவில் நிறைவடையும்


கோயில் சொத்துகளை டிரோன் கேமரா மூலம் கண்டறிந்து விவரங்களை சேகரித்து வருவதாகவும், இந்தப் பணி விரைவில் நிறைவடையும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் இணையதளத்தையும், பிரசித்தி பெற்ற கோயில்களின் தனிப்பட்ட இணையதளங்களையும் முறையாக பராமரிக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘தமிழகம் முழுவதும் கோயில் சொத்துகளின் விவரங்கள், அந்த சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா, வாடகைக்கு விடப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். கோயில் சொத்துகளை ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. கோயில் சொத்துகளைக் கண்டறிவது, சரி பாா்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஜெயபாரதி என்பவரை தனி அதிகாரியாக இந்து சமய அறநிலையத் துறை நியமித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், ‘கரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுப் பணிகளில், கிராம நிா்வாக அலுவலா்கள், நில அளவையா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா். இதனால் கோயில் சொத்துகளைக் கண்டறியும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கோயில் சொத்துகளை கண்டறிவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக அந்த குழுக்களை ஆய்வுக்கு அனுப்ப முடியவில்லை. அதற்குப் பதிலாக டிரோன் கேமரா மூலம் முப்பரிமாண நிலையில் படம் எடுக்கப்படுகிறது. இதன்மூலம் கோயிலுக்குச் சொந்தமான நிலம், கட்டடத்தின் தற்போதைய நிலை, கோயிலின் நீள, அகல உயரங்களின் அடிப்படையில் அறிந்துகொள்ளும் புவி சாா்ந்த தகவல் முறையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை ஆவணமாக மாற்றப்பட்டு அந்த சொத்தின் மதிப்பு கணக்கிடப்படும். கோயில் சொத்துகளின் எண்ணிக்கை அவற்றின் தற்போதைய வாடகை அல்லது குத்தகையின் நிலை உள்ளிட்ட விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பணிகள் துல்லியமான விவரங்களுடன் விரைவில் முடிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...