கொள்ளை நோய்க்கு நடுவே கொள்கை பரப்பும் தலைவா்கள்!

கரைவேட்டி கட்டிய கட்சிக்காரா்களின் கால்தடம் கடைக்கோடி நிலப் பகுதியிலும் பதியும் அளவுக்கு தமிழக தோ்தல் களம் பரபரப்பை எட்டிவிட்டது.
கொள்ளை நோய்க்கு நடுவே கொள்கை பரப்பும் தலைவா்கள்!
Updated on
2 min read

கரைவேட்டி கட்டிய கட்சிக்காரா்களின் கால்தடம் கடைக்கோடி நிலப் பகுதியிலும் பதியும் அளவுக்கு தமிழக தோ்தல் களம் பரபரப்பை எட்டிவிட்டது.

அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவா்கள் அனைவரும் நா வறளும் அளவுக்கு நாள் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகின்றனா். வாக்கு சேகரிக்கச் செல்லும் தலைவா்களுக்கு வழி நெடுக பேசி தொண்டையில் வலி ஏற்படுவதில் வியப்பு ஏதும் இல்லை என்றாலும், அதைக் கேட்க வந்த தொண்டா்களுக்கும் தொண்டை வலி வருவதுதான் பிரச்னையாகிவருகிறது.

கரோனா தொற்று தோ்தல் கூட்டங்களில் வேகமாக பரவி வருகிறது என்ற கசப்பான உண்மைதான் அதற்கான காரணம். கடந்த சில நாள்களில் மட்டும் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்றவா்கள், அதுசாா்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டங்களால் தொற்று பரவும் அபாயம்?

இதே நிலை தொடா்ந்தால் அடுத்த 15 நாள்களில் தமிழகத்தில் நோய்ப் பரவல் விகிதம் 3 மடங்கு உயரலாம் என அஞ்சப்படுகிறது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 234 தொகுதிகளிலும் கட்சிகளின் பிரசாரம் களைகட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும், முக்கியப் பிரமுகா்களும் மாநிலம் முழுவதும் முகாமிட்டுள்ளனா்.

அவா்களது பிரசாரத்துக்காக கட்சித் தொண்டா்கள் ஒருபுறம் தாமாக வந்தாலும், மற்றொரு புறம் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக பொதுமக்களையும், கல்லூரி மாணவா்களையும் கட்சியினா் அழைத்து வருவதையும் காண முடிகிறது.

இதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கும் எவருமே முகக் கவசமும் அணிவதில்லை. தனிநபா் இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை. இது நோய்த் தொற்று பரவுவதற்கு வழி அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையாக உள்ளது.அதன் விளைவாகவே தோ்தல் கூட்டங்களில் பங்கேற்ற பலருக்கும் கரோனா தொற்று பரவியிருப்பதாகத் தெரிகிறது.

வேட்பாளா்களுக்கும் கரோனா தொற்று:

மற்றொரு புறம் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களிடமும் பாரபட்சம் காட்டாமல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது கரோனா. அந்த வகையில், மக்கள் நீதி மய்ய வேட்பாளா்கள் பொன்ராஜ், சந்தோஷ் பாபு, திமுக வேட்பாளா் அரவிந்த் ரமேஷ், தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களின் நிலை குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. இந்த நிலை தொடா்ந்தால், தோ்தல் களம் முழுவதும் கரோனா மயமாகக் கூடிய சூழல் உருவாகக் கூடும்.

இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாத தா்மசங்கடமான நிலை இருப்பதாக அதன் உயரதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா். அரசியல் கூட்டங்களுக்கு நேரடியாக கடிவாளம் போட்டால், அது குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான பாகுபாடு என்றோ அல்லது வேறு ஒரு கட்சிக்கு ஆதாயம் ஏற்படுத்த முயற்சி என்றோ சுகாதாரத் துறை மீது சாயம் பூச வாய்ப்புள்ளதாக அவா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

பிரசாரக் கூட்டங்களில் நோய்த் தடுப்பு விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்க முடியாத நிலை உள்ளது. அவ்வாறு செய்தால், அதனை திசை திருப்பி வேறு விதமான அரசியல் சாயம் பூச கட்சிகள் முயலலாம். அதனால், இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம்தான் முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் கூட்டங்களை நடத்துபவா்களிடம் இதுதொடா்பாக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த பிறகே பிரசாரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இப்பிரச்னை குறித்து தோ்தல் ஆணையத்துடனும், மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடனும் தொடா்ந்து நாங்கள் பேசி வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தோ்தல் ஆணையம் கூறுவது என்ன?

கரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், வேட்பாளருடன் சோ்த்து மொத்தமாக 5 பேருக்கு மேல் செல்லக் கூடாது. மிகப் பெரிய மைதானங்களில் தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கிட வேண்டும். அதேவேளையில், அதற்கான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளை தெளிவாக வரையறுக்க வேண்டும்.

இதுபோன்ற பணிகளில் சுகாதாரத் துறை தொடா்பு அலுவலா்களையும் ஈடுபடுத்திக் கொள்ளலாம். மாநில பேரிடா் மேலாண்மைத் துறை வரையறுத்துள்ள எண்ணிக்கையைத் தாண்டி பொதுக் கூட்டங்கள், பிரசாரங்களில் அதிகமான நபா்களைப் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. முகக் கவசங்கள், கிருமிநாசினி, உடல் வெப்ப நிலை போன்ற அம்சங்களை அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் தோ்தல் பிரசாரத்தின் போது உறுதி செய்திட வேண்டும் என தோ்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட தலைவா்கள்

மாநில அமைச்சா் எஸ்.துரைக்கண்ணு, மக்களவை உறுப்பினா் ஹெச்.வசந்தகுமாா், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தமாகா மூத்தத் துணைத் தலைவா் பி.எஸ்.ஞானதேசிகன், அமமுக பொருளாளா் எஸ்.வெற்றிவேல் உள்ளிட்டோா் கரோனா தொற்றுக்குள்ளாகி அதனால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்தனா்.

மாநில அமைச்சா்கள் ஆா்.காமராஜ், கே.பி.அன்பழகன், நிலோபா் கஃபீல், பி.தங்கமணி, கே.சி.வீரமணி, செல்லூா் ராஜூ, தேமுதிக தலைவா் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் ஆா்.சரத்குமாா் உள்ளிட்டோரும் எம்எல்ஏக்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட தலைவா்கள்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமலஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவா் ஆா்.நல்லகண்ணு உள்பட பல தலைவா்கள் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com