எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அதிமுக - பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: முதல்வர் பேச்சு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசினார்.

News image
கோவையில் முதல்வரும், பிரதமரும்
Updated On :30 மார்ச் 2021, 3:57 pm

DIN

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 13 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வருகை தந்தார். 

Story image

தாராபுரத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தாராபுரம் தொகுதி வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Story image

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

"இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும்.

இந்த தேசத்துக்கு நாட்டிற்கு நன்மை செய்யும் பிரதமரால் உருவாக்கப்பட்ட கூட்டணி நம்முடைய வெற்றிக்கூட்டணி. பாரதப் பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் நாடு உயர்வடையவும், மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையில் நாட்டு மக்களின் கனவை நனவாக்கி வருகிறார் பிரதமர் மோடி.

உலக அளவில் இந்தியத் திருநாடு பெருமையடைய அவரது உழைப்பு காரணம் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கேட்டுக்போது எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

தமிழகத்தில்  5,200 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலமாக சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கி உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாகக்காரணமாக இருந்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் நீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம். இந்தத்திட்டம் சாத்தியமாகும்போது தமிழக மக்கள் ஏற்றம் பெருவதுடன், விவசாயிகள் மகிழ்ச்சியடைவதுடன், குடிநீர் பிரச்னை இல்லை என்ற சூழ்நிலை உருவாகும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தர முயற்சி பிரதமர் முயற்சி எடுப்பார்கள் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிகப்பெரிய திட்டம் வரவேணடும் என்று சொன்னால் மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான உறவு இருந்தால்தான் நிறைவேற்ற முடியும் என்பதுடன், நிதியும் தேவையாகும். தமிழக மக்களின் மீது பேரன்பு கொண்ட பிரதமர் இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்றித்தருவார்கள்.

தமிழகத்தில் மத்திய. மாநில அரசு இணைந்து பொலிவுறு நகரம் திட்டம் மூலமாக பெருநகரங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் தமிழகத்தை நோக்கி முதலீட்டாளர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது சுமார் 3 லட்சத்து 500 கோடி தொழில் முதலீடு செய்ய முன்வந்து 304 தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இது வரலாற்று சாதனை என்பதுடன், தொழிற்சாலைகள் வரும்போது நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேர் என 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் கனவுத்திட்டமான அவிநாசி-அத்திக்கடவு திட்டமும் ரூ.1,652 கோடியில் தொடங்கப்பட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். இதன் மூலமாக வறட்சியான பகுதியானது செழுமையான பசுமைக்காட்சியாக மாறிவிடும்.

அதே போல, நொய்யல் ஆற்றை நவீனப்படுத்தும் பணிக்காக ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. கீழ்பவானி பாசனத்திட்டம் நவீனப்படுத்த ரூ.930 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவிநாசிபாளையம் வரையில் 4 வழிச்சாலைக்காக ரூ.724 கோடியில் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாடுக்காக திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் ரூ.950 கோடியில் பொலிவுறு நகரம் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல, திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,125 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.636 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவுள்ளனர். குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக  திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, பல்லடம் நகராட்சி, அவிநாசி, மடத்துக்குளம் பேரூராட்சிகளில் சுமார் ரூ.500 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 75 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் நிறைவேற்றப்படும்போது ஏழை,எளிய மக்களுக்கு சொந்தமாக வீடுகள் கிடைக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளோம்.

ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்கான அதிகமான கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.  இதில், 2013 இல் காங்கயத்தில் கலை, அறிவியல் கல்லூரி, 2019 இல் அவிநாசியில் புதிய அரசு கலை கல்லூரி, 2020 இல் பல்லடத்தில் அரசு, கலை அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டதால் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக இருந்த நிலையில் கல்விக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்ததால் தற்போது 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஆகவே, எந்த மாநிலத்தில் கல்வி உயர்வு அடையும்போது அந்த மாநிலத்தில் பொருளாதாரம் மேம்பாடு அடையும். தமிழகத்தில் 248 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. 117 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 1730 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருமண நிதியுதவித்திட்டத்தின்கீழ் 12 லட்சத்து 51 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். அதே விஞ்ஞான கல்வி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக 52 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில் பிரதமரின் ஆலோசனையைப் பெற்று செயல்பட்டதால் தமிழகத்தில் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் தமிழகத்தில்தான் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனையான நேரத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருள்கள் மற்றும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1000 கொடுத்த அரசு தமிழக அரசு. ஏழைகள் பாதிக்கப்படும்போது அவர்களை மீட்டெடுப்பது அரசு தமிழக அரசு.

ஆகவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நம் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து வேட்பாளர்களையும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.