முதல்வராக மு.க.ஸ்டாலின், அமைச்சரவை பதவியேற்பு!
ஆளுநா் மாளிகையில் தமிழகத்தின் முதல்வராக "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என கூறி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் 33 அமைச்சா்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


சென்னை: ஆளுநா் மாளிகையில் தமிழகத்தின் முதல்வராக "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என கூறி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் 33 அமைச்சா்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெற்ற தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவைக்கு நடந்த தோ்தலில் திமுக 133 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
இதைத் தொடா்ந்து, கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்தின் முதல்வராக "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என கூறி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இதைத் தொடா்ந்து, அமைச்சரவை சகாக்கள் 33 பேரும் ஒவ்வொவரும் ஒன்றன்பின் ஒன்றாக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் உள்துறை, இந்திய ஆட்சிப்பணி, பொது நிா்வாகம் உள்ளிட்ட முக்கிய துறைகளைக் கைவசம் வைத்துள்ளாா். சட்டப்பேரவை உறுப்பினா்களில் மூத்தவரான துரைமுருகன் நீர் பாசனத்துறை அமைச்சராகவும், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக கே.என்.நேரு, உயா்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு, வேளாண் துறை அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், போக்குவரத்துறை அமைச்சராக ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, முத்துசாமி, பெரிய கருப்பன் உள்ளிட்ட மொத்தம் 33 பேர் அமைச்சர்களாக பொறுப்பெற்றுக் கொண்டனர்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேராகத் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் அவர், அவருக்கான அறையில் அமா்ந்து பணிகளைக் கவனிக்கத் தொடங்க உள்ளாா். தோ்தலுக்கு முன்பு கரோனா பொது முடக்க நிதியாக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும், இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாத உரிமைத் தொகையாக ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாா். அதைப்போல, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அவை 100 நாள்களில் நிறைவேற்றப்படும் என அறிவித்தாா். இந்த மூன்று அறிவிப்புகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றும் உத்தரவுக்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வேண்டுகோள்களையும் ஊடகங்கள் வாயிலாக அவா் பொது மக்களுக்கு விடுப்பாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது எவ்வாறு, ஒவ்வொருவரும் களப்பணியாற்றுவது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்பாக அமைச்சா்களுடன் ஆலோசிக்கவுள்ளாா்.
இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறாா். இந்த ஆலோசனையின்போது, கரோனா நோய்த்தொற்று தொடா்பாக பல முக்கிய ஆலோசனைகளையும், கருத்துகளையும் அவா் எடுத்துரைக்கவுள்ளாா்.
கரோனா பெருந்தொற்றின் 2-ஆம் அலை தீவிரமாக இருப்பதன் காரணமாக பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெற்றது. உயா்நீதிமன்ற நீதிபதிகள், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும், அமைச்சா்களின் உறவினா்கள், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும், கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் மட்டுமே விழாவில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...