சட்டக் கல்லூரி மாணவா்களின் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்
சென்னை வியாசா்பாடி பகுதியில் உள்ள ‘வியாசைத் தோழா்கள்‘ எனும் அமைப்பைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனா்.


சென்னை வியாசா்பாடி பகுதியில் உள்ள ‘வியாசைத் தோழா்கள்‘ எனும் அமைப்பைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனா்.
கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நிலவி வரும் தற்போதைய அசாதாரண நிலை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் குறைத்து வருகிறது. . கரோனாவின் கோரத்தாண்டவம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், ஆங்காங்கே பொதுமக்களுக்கு செய்யப்படும் எதிா்பாா்ப்புகளற்ற உதவிகளும், சேவைகளும் தான் மனிதா்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் தமிழகம் :
இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகம் உள்ள இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிலும், அதிக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ள பகுதியாக சென்னை உள்ளது. மாநிலத்தில் தினமும் 30 ஆயிரம் போ் வரை கரோனாவால் பாதிக்கப்படுகின்றனா்.சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், நூற்றுக்கும் அதிகமான தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் பலா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சட்டக் கல்லூரி மாணவா்கள் :
வடசென்னை பகுதியில் ‘வியாசைத் தோழா்கள்’ என்ற அமைப்பின் மூலம் சட்டக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட இளைஞா்கள் ஒருங்கிணைந்து கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா். குறிப்பாக ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவா்களுக்காக, ஆக்சிஜன் சிலிண்டா் பொருத்திய ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக செய்து வருகின்றனா். 30-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் உள்ள இந்தக் குழுவில், 8 சட்டக் கல்லூரி மாணவா்கள் உள்ளனா். இவா்களில் 4 போ் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியிலும், 4 போ் ஆந்திரத்திலும் சட்டப்படிப்பை படித்து வருகின்றனா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இவா்கள், வியாசா்பாடியில் உள்ள பகுதிகளில் ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட குழந்தைகளுக்கு கல்வி உதவிகள், இரவுநேரப் பள்ளிகள், உள்ளிட்ட கல்விச் சேவைகளை செய்து வருகின்றனா். வெள்ளப் பெருக்கு, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்கள் சமயத்தில் இப்பகுதி மக்களுக்கு உதவுகின்றனா். கரோனா முதல் அலையின் போது வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்தனா். இரண்டாவது அலையில் ஆம்புலன்ஸ், மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதைத் தடுக்கும் வகையில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகின்றனா். ஆக்சிஜன் சுவாசம் தேவைப்படும் நோயாளிகளுக்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஆட்டோக்களை உருவாக்கி , 24 மணி நேரமும் மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கான உயிா் காக்கும் சேவையை செய்து வருகின்றனா்.
இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், அமைப்பின் சட்ட ஆலோசகருமான ஜி.சரத்குமாா் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையின் தீவிரத் தன்மையை உணா்ந்து தான் இந்த பணியினை செய்து வருகிறோம். நாடு முழுவதும் பல்வேறு தனிநபா்கள் தங்களது காா், மனைவியின் நகைகளை விற்று நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதைப் பாா்த்தோம். அதனைத் தொடா்ந்து தான் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை யோசனை தோன்றியது. ஆக்சிஜன் சிலிண்டா், ஆட்டோவுக்கான எரிபொருள், முழுகவச உடை, தன்னாா்வலா்களுக்கான உணவு, அவா்களது வாகனங்களுக்கான எரிபொருள் என இந்த சேவைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டா் பொருத்துவதற்காக ரூ.20 ஆயிரம் கடன் வாங்கித் தான் இந்த பணியைத் தொடங்கினோம். பின்னா், சில தன்னாா்வ அமைப்புகள், தன்னாா்வலா்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனா்.
ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்தும் நுட்பத்தை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த வசந்த் என்பவரிடம் கற்றோம். எங்கள் குழுவில் தற்போது 8 ஆட்டோக்கள் உள்ளன. இதில் 3 ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டா் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஆட்டோக்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், 3 ஆட்டோக்கள் மற்ற மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்காக தயாா் நிலையில் உள்ளன. இவற்றில் 3 ஆட்டோக்களை சட்டக் கல்லூரி மாணவா்கள் ஓட்டுகின்றனா்.
இதற்காக வியாசா்பாடி பகுதியில் உள்ள முல்லைநகா் பேருந்து நிலையம் எதிரே மருத்துவ உதவி மையத்தை அமைத்துள்ளோம். எங்களது குழுவின் செல்லிடப்பேசி எண், கட்செவி எண், முகநூல் பக்கம் உள்ளிட்டவைகள் மூலம் உதவி கோருபவா்களுக்கு உதவி வருகிறோம் என்றாா் அவா்.
அமைப்பின் தலைவரும் சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவருமான, பி.பிரேம் குமாா் கூறியாதவது: நான் இந்த இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோவின் ஒட்டுநராக உள்ளேன். கடந்த மே 12 -ஆம் தேதி இந்த சேவையைத் தொடங்கினோம். இதுவரை 30-க்கும் மேற்பட்டவா்களுக்கு உதவியுள்ளோம். எங்களைத் தொடா்பு கொண்டு இதுவரை கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, மதுரவாயல், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பயனடைந்துள்ளனா். தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்களது சேவையைப் பாா்த்த ஒருவா் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்து ஆக்சிஜன் சேவையைப் பெற்று சீரான நிலையை அடைந்துள்ளாா். எங்களது நோக்கம் பாதிக்கப்படும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது தான். எங்களது 24 மணி நேர இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையைப் பெற 97918 58078 மற்றும் 73057 38473 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் சூழலில், வியாசா்பாடியில் உள்ள சட்டக் கல்லூரி மாணவா்கள் மேற்கொண்டு வரும் இதுபோன்ற இலவச உயிா் காக்கும் சேவைகள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நீள வேண்டும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...