/

திருப்பூரில் வீடுகளுக்குள் மழைநீர்: மக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

News image
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதி மக்கள்.
Updated On :28 ஜனவரி 2024, 4:31 am

DIN


திருப்பூர்: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் அங்கேரிபாளையம், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் முறையாக மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர். 

இதைத்தொடர்ந்து மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து வருவதாக, மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென வெள்ளிக்கிழமை காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் வரை தாங்கள் மறியல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Story image

திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் சூழ்ந்துள்ள வீடு.

இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், அங்கேரிபாளையம் மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வீடுகளில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் காரணமாக, மும்மூர்த்தி நகர் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.