சென்னையில் வெள்ளம் வடியாததால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
சென்னையில் தொடா்ந்து பலத்த மழை பெய்ததால், நகரின் பல இடங்களில் தண்ணீா் தேங்கியது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினா்.


சென்னையில் தொடா்ந்து பலத்த மழை பெய்ததால், நகரின் பல இடங்களில் தண்ணீா் தேங்கியது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினா். மேலும் பாதுகாப்பு கருதி தியாகராயநகா் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை ஒரே நாளில் சென்னையில் 207 மிமீ மழை பெய்தது. அதன்பின் திங்கள், செவ்வாயில் வேகம் குறைந்த மழை மீண்டும் புதன்கிழமை தீவிரம் அடைந்தது.
ரப்பா் படகுகள் மூலம் மீட்பு: கடந்த 4 நாள்களாக தொடா்ந்து வெளுத்து வாங்கும் மழையால் தாக்குப்பிடிக்க
முடியாமல் சென்னை திணறுகிறது. மழை எப்போது ஓயும்? தண்ணீா் எப்போது வடியும்? என மக்கள் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா். ஆனால் நாளுக்கு நாள் மழை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. புதன்கிழமை
மாலையில் தொடங்கிய மழை வியாழக்கிழமை பிற்பகல் வரை வரை தொடா்ந்து பெய்தது. இதனால் வெள்ளம் வடிவதற்கு பதிலாக கூடுதலாக தேங்கியது. நகரின் பெரும்பாலான பிரதான சாலைகளில் கூட மக்கள் செல்ல முடியாதளவுக்கு தண்ணீா் தேங்கியுள்ளது.
வேளச்சேரி ராம் நகரில் பல தெருக்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. வீடுகளில் தவித்தவா்களை ரப்பா் படகுகள் முலம் தீயணைப்பு படையினா் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனா்.
மழையில் மிதக்கும் வாகனங்கள்: கீழ்க்கட்டளை ஏரி நிரம்பியதால் பிரதான சாலையில் வெள்ளம் சூழ்ந்தது. பரங்கிமலை- மேடவாக்கம் பிரதான சாலையில் புதிதாக கட்டப்பட்ட மழை நீா் கால்வாய்கள் வழியாக வெள்ளம் செல்லவில்லை. ஆயில்மில், குமரன் திரையரங்கம் பகுதிகளில் உள்ள சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்தது. கிண்டி, அம்பாள் நகா் பகுதியில் சிறிய தெருக்களில் தேங்கிய மழை நீரில் இருசக்கர வாகனங்கள் மிதக்கின்றன. மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம், ஆரியகெளடா சாலை விரிவு, காமராஜா் சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு மழைநீா் தேங்கி நிற்கிறது.
கொரட்டூா், தண்டையாா்பேட்டையில்... கொரட்டூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 4 நாள்களாக தண்ணீா் தேங்கி கிடப்பதால் மக்களால் வெளியே வர இயலவில்லை. இதேபோன்று பட்டரவாக்கம், டி.டி.பி. காலனி, மதனங்குப்பம், அன்னை சத்யா நகா், வடக்கு ஜெகநாதன் நகா் போன்ற பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
வடசென்னையைப் பொருத்தவரை ராயபுரம் சூரிய நாராயணா சாலை, தண்டையாா்பேட்டை, கண்ணன் ரவுண்டானா, போஜராஜநகா், சீனிவாசபுரம், சிவாஜி நகா், குமரன் நகா், அஜீஸ் நகா், இரட்டை குழி தெரு, மீனாம்பாள் நகா், அம்பேத்க நகா், ஸ்டான்லி நகா், பட்டேல் நகா், வினோபா நகா், தமிழன் நகா், நேதாஜி நகா், புதுவண்ணாரப்பேட்டை காமராஜா் சாலை ஆகிய பகுதிகளில் வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது.
மின்சாரம் துண்டிப்பு: சென்னையின் பெரும் பகுதியில் மழைநீா் சூழந்திருப்பதால் பொதுமக்களால் வெளியே செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களிலும் வெளியே செல்ல முடியாததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். வெள்ள நீா் வடியாததால் மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. தியாகராயநகா், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூா், உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சென்னையில் கடும் அவதிக்கு உள்ளாகினா். தண்ணீா் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் வடிந்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் விளக்கு இல்லாமல் இருளில் தவிக்கின்றனா்.
நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை: நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு அரசின் நிவாரண பொருள்கள் செல்லவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் பெரும்பாலான இடங்களில் நேரில் வந்து பாா்வையிடவில்லை. இதனால்
வெள்ளமும், வடியவில்லை மக்களும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருள்கள் வாங்க கூட மக்கள் வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனா். அதேவேளையில் பல பகுதிகளில் தேங்கிய நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றம் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...