'வெறும் 37% முன்களப் பணியாளர்கள் மட்டுமே 2ம் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்'

தமிழகத்தில் இதுவரை 80 சதவீத முன்களப் பணியாளர்கள் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்தியிருந்த போதிலும்,
'வெறும் 37% முன்களப் பணியாளர்கள் மட்டுமே 2ம் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்'
'வெறும் 37% முன்களப் பணியாளர்கள் மட்டுமே 2ம் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்'


சென்னை: தமிழகத்தில் இதுவரை 80 சதவீத முன்களப் பணியாளர்கள் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்தியிருந்த போதிலும், வெறும் 37 சதவீதம் பேர் மட்டுமே இரண்டாம் தவணையை செலுத்தியிருப்பதாக மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவப் பணியாளர்களும், முன்களப் பணியாளர்களும் தாமாக முன் வந்து இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. ராதாகிருஷ்ணன், முதல் தவணை செலுத்திக் கொண்டு, இரண்டாம் தவணை செலுத்தாத முன்களப் பணியாளர்களின் பட்டியலை அரசு தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டிலேயே, தமிழகத்தில்தான், அதிகபட்சமாக 1.72 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே, பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிகபட்சமாக 1.39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 2.45 கோடி கரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2.25 கோடி தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், 19.87 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 2.36 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 9.94 லட்சம் தடுப்பூசிகளும், தனியார் மருத்துவமனைகளில் 3.89 லட்சம் தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன. ஆகஸ்ட் மாதத்துக்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு 79 லட்சமாகும். தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. ஆனால் தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய முதல் நான்கு மாதங்களில், மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கத் தவறிவிட்டது. தற்போதுதான், அதனை ஈடு செய்யும் வகையில், மக்கள் தொகை மற்றும் தடுப்பூசியின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு தடுப்பூசியை ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழகத்தில் நான்கு முதல் ஐந்து மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள்தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுமார் 96 தனியார் மருத்துவமனைகள் மீது, கரோனா தடுப்பூசிக்கு அதிக விலை நிர்ணயம் செய்த குற்றத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களும் புகார் தரலாம் என்றும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com