சென்னையில் ஒரே நாளில் 1,278 பேரிடம் ரூ.2.55 லட்சம் அபராதம் வசூலிப்பு

பொது இடங்களில் 16.08.2021 அன்று ஒருநாள் மட்டும் முகக்கவசம் அணியாத 1,278 தனிநபர்களுக்கு மண்டல அமலாக்கக் குழுவினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் ஒரே நாளில் 1,278 பேரிடம் ரூ.2.55 லட்சம் அபராதம் வசூலிப்பு
சென்னையில் ஒரே நாளில் 1,278 பேரிடம் ரூ.2.55 லட்சம் அபராதம் வசூலிப்பு

பொது இடங்களில் 16.08.2021 அன்று ஒருநாள் மட்டும் முகக்கவசம் அணியாத 1,278 தனிநபர்களுக்கு மண்டல அமலாக்கக் குழுவினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவும், கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் சென்னை மாநகராட்சியின் வருவாய் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வெளியே வரும் போது முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, மண்டல அமலாக்கக் குழுவினரால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான பூங்காக்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் 16.08.2021 அன்று ஒருநாள் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது முகக்கவசம் அணியாத 1278 தனிநபர்களுக்கு ரூ.200 வீதம் ரூ.2,55,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/  என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது மாநகராட்சி அலுவலர்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஜூன் மாதம் 2021 முதல் இதுநாள் வரை திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2,999 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 70 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2,61,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்யாண மண்டபங்கள் தவிர்த்து, தனியார் இடங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், குடியிருப்பு வளாகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உட்பட பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி 16.08.2021 அன்று மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில் 32 பொது மற்றும் தனியார் இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 7 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு ரூ.26,600/- அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 06.05.2021 முதல் இதுநாள் வரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 8,117 நிறுவனங்களிடமிருந்தும், 48,033 தனிநபர்களிடமிருந்து ரூ.3,81,63,590 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கோவிட் தொற்றின் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் வெளியே செல்லும் தனிநபர்கள் பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிவதிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதிலும் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும், வெளியே செல்லும் தனிநபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com