தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு கட்சித் தொடங்கினாலும் ரஜினி தான் முதல்வர்: ரசிகர்கள்

ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை  வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 
சென்னை  வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம்
சென்னை  வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம்

ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை  வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தலைவா தமிழகம் காக்க வா! என்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அரசியலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

பிறகு உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தார். ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக மன்னிப்பும் கோரினார்.

இதனிடையே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன்பு அவ்வபோது கூடி வந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதல் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி மக்கள் மன்ற தலைமை நிா்வாகி விடுத்துள்ள எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகா்கள் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக வேண்டி அவரது ரசிகர்களில் பலர் மொட்டையடித்து வேண்டுதல்களை நிறைவேற்றி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் 12 மணிக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்க வேண்டுமென்றும், ஆர்ப்பாட்டத்தில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் மக்கள் மன்ற நிர்வாகி இப்ராஹிம் பேசியதாவது, ''ஜெகன்மோகன் ரெட்டி, பாண்டிச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரெங்கசாமி ஆகியோர் குறுகிய காலத்தில் முதல்வரானார்கள்.  

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூப்பனார் 20 நாள்களில் எதிர்க்கட்சி தலைவரானார். இதேபோன்று தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு கட்சி ஆரம்பித்தாலும் மக்களின் வாக்குகளால் நிச்சயம் ரஜினிகாந்த் முதல்வராவார்.

1995-ஆம் ஆண்டே கட்சி ஆரம்பித்திருந்தால், 1996-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிரந்தர முதல்வராக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருப்பார்.

மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதனை ரஜினிகாந்த் நிரப்புவார்.

கோடிக்கணக்கான ரசிகர்களின் தொடர் பிரார்த்தனையால் ரஜினிகாந்தின் உடல்நிலை விரைவில் குணமடையும். ரஜினிகாந்த்திற்காக விரதமிருந்து, மொட்டையடித்து, 22 கிலோமீட்டர் நடந்து வந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மற்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பணம் வசூல் செய்யும் நிலையில், தன் சொந்த பணத்தை செலவு செய்து மக்கள் நலப் பணிகளை ரஜினி ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் உடல்நிலை தான் முக்கியம். பழைய ரஜினிகாந்தாய் அவர் வரவேண்டும் என்பது ஒவ்வொரு ரசிகனின் விருப்பம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ரஜினிகாந்த்  அறிக்கை கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம். வழிப்போக்கர்களான மற்றவர்கள் விடும் அறிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com