Enable Javscript for better performance
10 ஆண்டுகளுக்குப் பின் திமுக அரசின் ஆளுநர் உரை - முழு விவரம்- Dinamani

சுடச்சுட

  10 ஆண்டுகளுக்குப் பின் திமுக அரசின் ஆளுநர் உரை - முழு விவரம்

  By DIN  |   Published on : 21st June 2021 03:38 PM  |   அ+அ அ-   |    |  

  purohit

  கவச உடை அணிந்து கரோனா நோயாளிகளை சந்தித்த முதல்வர்: ஆளுநர் உரையின் முக்கியம்சங்கள்

   

  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முழு உடல் கவசம் அணிந்து கரோனா சிகிச்சைப் பிரிவிற்கே நேரில் சென்று, கரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அங்கு பணிபுரியும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்கப்படுத்தினார் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

  தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் காலை 10 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.

  சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்துள்ளார்.

  ஆளுநரின் முழு உரை, 

  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 16வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் இங்கு கூடியிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களாட்சியின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்த மாமன்றத்தில் வீற்றிருக்கும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் எதிர்பார்க்கப்படும் கடமைகளை, நீங்கள் ஒவ்வொருவரும் செவ்வனே நிறைவேற்றுவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

  தமக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்த பாரபட்சமும் இன்றி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு எப்போதும் செயல்படும். அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் இந்த அரசின் நெறிமுறைக்கு ஏற்ப, தொடர்புடையோர் அனைவரையும், அனைத்துத் தரப்பு மக்களையும், சட்டமன்றப் பேரவையிலுள்ள அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து, கோவிட் பெருந்தொற்றினை எதிர்கொள்வது குறித்து இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

  இதையும் படிக்கலாமே.. ரூ.1,000 பயண அட்டை ஜூலை 15 வரை செல்லும்: அமைச்சர்

  திமுக தலைவர் கருணாநிதி மறைந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசு பதவியேற்றுள்ளது. 

  மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்டவும், அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும், இந்த அரசு உறுதியாக உள்ளது. வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும்.

  அதே நேரத்தில், ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும்.

  இந்த அரசு பதவியேற்றபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் புது தில்லி சென்று, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்குத் தேவைப்படும் உதவிகள், தமிழ்நாடு அரசின் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டிய பிரச்சினைகள், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் முக்கியத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி, ஒன்றிய அரசின் உதவியைக் கோரும் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரை நேரில் சந்தித்து அளித்தார். இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்ந்து, தமிழ்நாடு அரசிற்குத் தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம்.

  இந்த அரசு பதவியேற்றபோது, தமிழ்நாட்டையும் நம் நாடு முழுவதையும் பெருமளவில் பாதித்திருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கோவிட் தடுப்புப் பணிகள் தொய்ந்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தபோதே, மற்ற எல்லாப் பணிகளையும் விட, கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான பணிகளுக்கே முன்னுரிமை அளித்தார்கள்.

  தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த சூழ்நிலை அறவே மாறி, தற்போது, தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

  தமிழகமெங்கும் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்துவரும் முதல்வர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முழு உடல் கவசம் அணிந்து கரோனா சிகிச்சைப் பிரிவிற்கே நேரில் சென்று, கரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அங்கு பணிபுரியும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்கப்படுத்தினார்கள்.
  முதல்வரின் சிறப்பான முயற்சிகளினால், கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்கெதிரான போரில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும், புலம்பெயர் தமிழர் சமுதாயத்தினரும் ஊக்கத்துடன் ஒன்று திரண்டுள்ளனர். பெருநிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், வணிகர் சங்கங்கள், அரசுசாரா தொண்டமைப்புகள், அரசியல் கட்சிகள், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்த அரசுடன் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றனர். இதுவரை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதியுதவி பல்வேறு தரப்பிலிருந்து குவிந்துள்ளது. இத்தொகையில், 141.10 கோடி ரூபாய் உடனடியாகவும், வெளிப்படையாகவும், உயிர்காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

  மாநிலத்திலுள்ள 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் நிவாரணத் தொகையை இரண்டு தவணைகளாக மொத்தம் 8,393 கோடி ரூபாய் நிதியுதவியை மே, ஜூன் மாதங்களில் வழங்கியுள்ளது. இது தவிர, 466 ரூபாய் மதிப்பிலான 14 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும், 977.11 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. 

  ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை மனதிற்கொண்டு செயல்படும் இந்த அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் 10,068 கோடி ரூபாயை இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கி உள்ளது.

  இதையும் படிக்கலாமே.. அப்பல்லோவில் காரை விட்டு இறங்காமலேயே தடுப்பூசி

  மேலும், கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். அதற்கேற்ப, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது உள்ளிட்ட, மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500  படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் சேமிப்பும் உற்பத்தித் திறனும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

  திரவ மருத்துவ ஆக்சிஜனையும், அது தொடர்புடைய கருவிகளையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு, தனியார் முதலீட்டாளர்களுக்கு சிறப்புத் தொகுப்புச் சலுகைகளை இந்த அரசு வழங்குகின்றது. மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, தேசிய அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, அனைவருக்கும் இலவசமாக வழங்கும் கொள்கையை மீண்டும் ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக, நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்காக போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றது.

  இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வற்புறுத்தும்.

  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். 

  சட்டம், ஒழுங்கை திறம்பட பராமரிப்பதை உறுதி செய்வதற்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும் காவல்துறை பணியாளர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.  காவல் துறையினருக்குத் தேவையான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவல்துறைப் பணியாளர்களின் குறைதீர்க்கும் செயல்முறைகள் வலுப்படுத்தப்படும். கருணை அடிப்படையிலான நியமனங்கள், குறிப்பாக, பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கான நியமனங்கள் விரைவுபடுத்தப்படும்.

  அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை பெருமளவில் பாதிக்கக்கூடிய எண்ணற்ற அரசு வழக்குகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. அனைத்து வழக்குகளுக்கும் விரைவாக தீர்வு காண்பதற்கும், உரிய காலகட்டத்தில் முடிவு எட்டப்படும் வரை, அரசு ஒரு தரப்பாக உள்ள வழக்குகளை முனைப்புடன் ண்காணிப்பதற்கும், புதிய மேலாண்மை அமைப்புகளையும் நடைமுறைகளையும் இந்த அரசு உருவாக்கும்.

  பரிவுள்ள ஆளுமை என்பது இந்த அரசின் முக்கியக் கோட்பாடாகும். ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, முதல்வர் ஏற்கெனவே சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், பெருந்தொற்று பரவல் காலத்திலும், இதுவரை 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  மின் ஆளுகையை ஊக்குவித்து, இணையவழி மூலம் அரசு சேவைகளைப் பெறுவதற்கான வழிகளை உயர்த்தி, வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். ‘எங்கும் எப்போதும் அரசு சேவைகளை’ பொதுமக்கள் இணையவழி வாயிலாக உடனுக்குடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

  தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்வதே இந்த அரசின் முன்னுரிமை ஆகும். மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிரும் உரிய அதிகாரமும் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப்பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு, நிலுவையிலுள்ள புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும். பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொதுச்சேவைகளை முறைப்படுத்திட ‘சேவைகள் உரிமைச் சட்டம்’ அறிமுகப்படுத்தப்படும்.

  கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதைக் காண்கிறோம். இந்தப் போக்கை மாற்றியமைக்க, வரும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மனிதவளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். 

  இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும்.

  தமிழ்நாட்டின் நிதிநிலை கவலைக்குரியதாக இருக்கும் இச்சூழ்நிலையில், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவது இந்த அரசின் தலையாய கடமையாகும். இந்த வகையில், மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன்சுமையை குறைக்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் இந்த அரசு முழுக்கவனம் செலுத்தும். இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்.

  நம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில், இந்த அரசு, வேளாண்மைத் துறையை, ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றம் செய்துள்ளது. விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நலச் சங்கங்கள், வல்லுநர்களின் முனைப்பான பங்களிப்புடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள், பயிரிடுவதற்கான புதிய முறைகள், வேளாண்மை நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்காக, கால்நடைப் பராமரிப்பு, இயற்கை வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடுதல் போன்ற வேளாண் தொடர்புடைய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும்.

  வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

  முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும். கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும் பழங்களும் விற்பனை செய்யப்பட்டன. 

  பொதுமக்களிடையே பெருமளவில் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தை விரிவுபடுத்தி, தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

  2021-22 ஆம் ஆண்டில், 125 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கினை அடைய இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக, திட்டமிட்டபடி, இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி அன்று  மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. கடைமடைப் பகுதிகள் வரை நீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 4,061 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  தமிழ்நாடு போன்ற நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலத்திற்கு நீர்வள மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். எனவேதான், நீர்வளங்களுக்கென ஒரு தனி அமைச்சகம் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைப்  பாதுகாப்பதற்காக, நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும். இளைஞர்களின் ஆர்வத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டிலுள்ள நீர்வளங்கள் மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.
  கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென்று மத்திய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

  முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், மத்திய அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்ளும்.

  காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட இந்த அரசு உறுதியாக உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, அதன் தொடர்ச்சியாக, ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் இந்த அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்.

  கச்சத்தீவை மீட்க தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட, நமது மீனவர் சமூகத்தின் நலன்களை இந்த அரசு பாதுகாக்கும். இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும். கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக, மீனவர்கள் நலனிற்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு ஒன்றிய அரசிடம் இந்த அரசு கோரும்.

  குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்ட்’ வழங்கப்படும்.

  சமூகநிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, அத்தகைய சட்டங்களுக்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற, உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். 

  70 கோடி ரூபாய் செலவில் மதுரையில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

   கோவிட் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை விரைவாக மீட்டெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. சிறுகடன் பெற்றுள்ளவர்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு முதலமைச்சர் எடுத்துச் சென்றுள்ளார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தின்போது, குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணங்களை மிக விரைவாக அரசு வழங்கியுள்ளது. மேலும், மாநில அரசிடமிருந்து பெறப்படும் மூலதனம் மற்றும் வட்டி மானியங்களை விடுவிக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தியதன் மூலம் கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு நிலுவைத்தொகை செலுத்துவதற்கான காலஅளவும், 15 சட்டரீதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான காலஅளவும் நீட்டிக்கப்பட்டுள்ளன. நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறும்போது, சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவின் மீதான முத்திரைத் தீர்வையை செலுத்துவதிலிருந்து அளிக்கப்படும் விலக்கை, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அரசு நீட்டித்துள்ளது. தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்பட வேண்டிய தொழில் வரியை செலுத்துவதற்கான கால அளவும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும், சென்னை-பெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.

  மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.


  2016 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு, அனைத்துவகையிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏழை எளியோருக்கான வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பதில் இந்த அரசு கவனம் செலுத்தும். வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்காகக் கண்டறியப்பட்டுள்ள அனைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்கப்படும்.

  பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். சென்னைக்கான மூன்றாவது பெருந்திட்டத்தை தயாரிக்கும் உரிய காலமான 2026 ஆம் ஆண்டிற்கு முன்னரே அப்பணி முடிக்கப்படும்.

  சென்னைக்கு அருகில் இருந்த 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, மாநகர எல்லைகள் விரிவாக்கப்பட்டன.  இணைக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படைக் கட்டமைப்புகளில் இன்னும் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இணைக்கப்பட்ட பகுதிகளில் இந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 

  சென்னையில் மாநகரக் கட்டமைப்பை நவீன சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

  வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை வகுக்கவும், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும், சுற்றுச்சூழல், நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய ‘சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும்.

  முக்கியமான நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், அகலப்படுத்தவும், வலுப்படுத்தவும் தேவையான திட்டம் வகுக்கப்படும். அனைத்து முக்கிய நகரங்களுக்கும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டுகளில், காரணமின்றி நிறுத்திவைக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தைப் போலவே, 50:50 என்ற செலவுப் பகிர்வு அடிப்படையில், மத்திய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும். 

  மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து அமைப்புகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

  மாநிலத்தின் பேருந்துப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்குவதற்கும் திறம்பட செயல்படுத்துவதற்கும் இந்த அரசு உறுதியாக உள்ளது.
  தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், பழங்காலக் கோட்டைகளும் அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரியச் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.

  கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும். அனைத்து முக்கிய இந்துக் கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாநில அளவிலான ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்.

  மகப்பேறு உடல் நலன் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, பெண்களின் உடல்நலனை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

  பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு, இணையவழிக் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உயர் முக்கியத்துவம் வழங்கப்படும். வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவிக்கும்பொருட்டு, பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும்.

   

  சுய உதவிக்குழுக்களின் பொருளாதாரச் செயல்பாடுகளை உயர்த்துவதற்காக, அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் வழிவகைகள் வலுப்படுத்தப்படும். இணையவழி வணிகம் உட்பட, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதிகளையும் இந்த அரசு செம்மைப்படுத்தும்.

  தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.

  தற்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

  அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்களின் மூலம் நிரப்பப்படும்.

  பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்படும்.

  சச்சார் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு திறம்பட செயல்படுத்தும். 

  மாற்றுத் திறனாளர் நலன் தொடர்பான துறையை முதல்வர் தன் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டுள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 இன் விதிகள் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும். இவர்களுக்கான பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் ஆதரவளிக்கும் திட்டங்களின் பயன்கள் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, அதிக இடங்களில் களப்பணியாற்றிடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வலுப்படுத்தப்படும்.

  திருநங்கைகளின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த, வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

  ஒலிம்பிக் போட்டிகள் போன்ற சர்வதேசப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்வதற்குத் தேவையான, உயர்மட்ட செயல்திறன் பயிற்சி, ஊக்கத்தொகை, போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகள் ஆகியவை நமது மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். அரசுத் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களின் பணி நியமனம் திறம்பட செயல்படுத்தப்படும்.

  அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாக்கும். அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்பட்டு, செயல்படுத்தப்படும். 

  ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற மாபெரும் சமூகநீதித் தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும்.  ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும். அனைத்து மக்களும் சேர்ந்து ‘எமது அரசு’ என்று பெருமையோடு நெஞ்சு நிறைந்து சொல்லும் வகையில் இந்த அரசு தனது பயணத்தைத் தொடரும்.

  தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்றுவதற்கு இந்த அரசு உறுதியேற்றுள்ளது என்று ஆளுநர்  தனது உரையில் கூறினார்
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp