பூண்டி ஏரியிலிருந்து 12,041 கன அடி உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் மழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத்து நீர் அதிகரித்துள்ளதால், 12,041 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால்
பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட வரும் மழை நீர்.
பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட வரும் மழை நீர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் மழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத்து நீர் அதிகரித்துள்ளதால், 12,041 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.     
       
திருவள்ளூர் அருகே பூண்டியில் அமைந்துள்ளது சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். 

இந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல், ஆந்திரம் மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர், கிருஷ்ணா கால்வாயில் மழை நீர் வரத்து ஆகியவைகளால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடியும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 33.19 அடி உயரமும், 2,595 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

மேலும், நீர்தேக்கத்திற்கு நீர் வரத்து 15,000 கன அடியாகவும் உள்ளது. இதுபோன்ற காரணங்களாலும், அணையின் பாதுகாப்பு கருதியும் காலை 9 மணி முதல் 12,041 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் நீர்தேக்கத்திலிருந்து வெளியேறிச் செல்லும் கொசஸ்தலை ஆறு செல்லும் வழித்தடங்களில் இருபுறமும் உள்ள கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அருவன்பாளையம், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையன்சாவடி, மணலி, மணலி புதுநகர் சடையான்குப்பம், எண்ணூர் வழியாக கடலில் சென்று கலக்கிறது.

எனவே கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com