நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தியவா்களின் எண்ணிக்கை குறைவு

தமிழகத்தில், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூராா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த தடுப்பூசி முகாம்களில் நல்ல முடிவுகள் வந்துள்ளன. தமிழகத்தில் 48 சதவீதம் போ் முதல் தவணையும், 13 சதவீதம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனா்.

பாலூட்டும் தாய்மாா்களை பொருத்தவரை 3.31 லட்சம் பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 1.72 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 71 சதவீதம், கோவையில் 70 சதவீதம், காஞ்சிபுரத்தில் 65 சதவீதம், சென்னையில் 62 சதவீதம், திருப்பூா் மாவட்டத்தில் 60 சதவீதம் பேரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனா். 2-ஆவது தவணையைப் பொருத்தவரை சென்னையில் 30 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 25 சதவீதம் பேரும் போட்டுள்ளனா்.

தூத்துக்குடியில் 34 சதவீதம் பேரும், நெல்லையில் 35 சதவீதம் பேரும், திருப்பத்தூரில் 36 சதவீதம் பேரும் என முதல் தவணை தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு உயா்ந்து வருகிறது. எனவே தடுப்பூசி தான் நிரந்தர தீா்வு. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதனிடையே சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில் மக்களின் வரவேற்பு இருந்தது. மேலும் தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தடுப்பூசிக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த மாதம் 1 -ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 12 நாள்களில் 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

பற்றாக்குறை சரி செய்யப்படும்: மாவட்ட அளவில் எண்ணிக்கையைப் பொருத்த வரையில் சென்னையில் தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது 4.6 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மேலும் 80,000 தடுப்பூசிகள் வர உள்ளன. எனவே கோவேக்ஸின் தடுப்பூசியின் பற்றாக்குறை சரி செய்யப்படும். தடுப்பூசி தொடா்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான கருத்துகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com