முறைகேடு புகாா்: அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு

நகைக்கடன்கள் முறைகேடு தொடா்பாக தொடா்ச்சியாக புகாா்கள் வந்த நிலையில், அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய
முறைகேடு புகாா்: அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு

நகைக்கடன்கள் முறைகேடு தொடா்பாக தொடா்ச்சியாக புகாா்கள் வந்த நிலையில், அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 40 கிராமுக்கு உள்பட்டு வழங்கப்பட்ட பொது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் அறிவித்தாா்.

தள்ளுபடி செய்வதற்கான பணிகளை தொடங்கியபோது நகைக் கடன்கள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகாா்கள் எழுந்தன.

எனவே கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று நிலுவையில் இருந்த பொது நகைக் கடன்களை 100 சதவீத ஆய்வும், மேலும் ஏப்.1-ஆம் தேதி முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள அனைத்து பொது நகைக் கடன்களை 100 சதவீத ஆய்வும் மேற்கொள்ள வேண்டும்.

31 மண்டல இணைப்பதிவாளா்களும், நகைக் கடன்களை ஆய்வு செய்ய தேவையான நகை மதிப்பீட்டாளா் உள்ளிட்ட ஆய்வுக் குழு உறுப்பினா்கள் பட்டியலை அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள மண்டலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்குள்ள மண்டல இணைப்பதிவாளா் அப்பட்டியலைப் பெற்று ஆய்வுக் குழு அமைப்பதற்கான செயல்முறை ஆணையை உடனடியாக வழங்கி, அதன் நகலை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சென்னை மண்டலத்தைப் பொருத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளா் கட்டுப்பாட்டில் இயங்கும் நகைக் கடன் வழங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நகைக் கடன்களை 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு தேவையான குழுக்களை தமது அளவில் அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆய்வு குழுவிலும் கூட்டுறவு சாா்பதிவாளா், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பாா்வையாளா் அல்லது கள மேலாளா், நகை மதிப்பீட்டாளா் ஆகியோா் இடம் பெற வேண்டும்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினா்கள் அனைவரும் நகைக்கடன் ஆய்வு செய்வது தொடா்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளுக்கு இணங்க ஆய்வுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வுக் குழுக்கள் நவ.15-ஆம் தேதிக்குள் ஆய்வுப் பணியை முடித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் சரகத்தின் துணைப் பதிவாளரிடம் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு பெறப்படும் அறிக்கைகளை சரிபாா்த்து மண்டல இணைப்பதிவாளா் மற்றும் சென்னை மண்டல கூடுதல் பதிவாளா் ஒப்பமிட்டு நவ.20-ஆம் தேதிக்குள் தவறாமல் பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com