நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனி 94-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு நாளை (1.10.2021) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். 
நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். “நடிப்பு தனது மூச்சு என்றும் நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்” என்று மிகத் தெளிவாக தன்சுயசரிதையில் குறிப்பிட்டு அதற்கேற்ப வாழ்ந்தும், நடிப்பிலே உச்சம் தொட்டும், உலகப் புகழ் பெற்றவரவர். குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை “சிவாஜி கணேசன்” என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது.

காமராஜர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும், அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமை அடைகிறது என்று குறிப்பிட்டார். கருணாநிதி ‘பொங்கு தமிழர் கண்டெடுத்த புதையல், புத்தர் வழிவந்த காந்தி மகான் பக்தர்’ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று பெருமையோடு குறிப்பிட்டதோடு, அவர் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் திலகம் திரைவானிலே புதிய உச்சம் தொட்டார். கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் அவருடைய நினைவு நாளில் 21.07.2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் பேசிய கருணாநதி ‘‘நான் எழுதிய கவிதை வரிகளுக்கும், வசனங்களுக்கும் உயிர்கொடுத்தவர்; தமிழாக வாழக்கூடியவர்; தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர்; என்னருமைத் தோழர், எனதாருயிர் நண்பர் என்றும், என்னுள்ளே உறைந்திருப்பவர் சிவாஜி கணேசன்’’ என்றும் குறிப்பிட்டதோடு, ‘‘எனது நண்பரின் சிலை மட்டும் இங்கே அமையாது போயிருக்குமேயானால், நானே இங்கு சிலையாகியிருப்பேன்’’ என்று நெகிழ்ந்து குறிப்பிட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடக்கக் காலத்தில் எண்ணற்ற நாடகங்கள், 300க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், 2 இந்தி திரைப்படங்கள், 9
தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்து தமிழ்த் திரையுலக வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்தார். “நடிகர்திலகம்”, “நடிப்புச் சக்கரவர்த்தி” என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் போற்றி அழைக்கப்பட்டார். இவர் நடித்த கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன்,
வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தலைமுறைகள் பல கடந்தும் காண்போரின் மனதில் நின்று நிலைப்பதே சரித்திரச் சான்றாகும்.
நடிகர் திலகத்தின் திறமைக்குச் சான்றாக பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் நம் தாய்நாட்டின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளோடு அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அன்னாருடைய அருமை பெருமைகளை போற்றுகின்ற வகையில் அவரின் பிறந்த நாளானது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எது நடிப்பு, எது இயல்பு என காண்போர் அறிந்திடா
வண்ணம், ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித் திரையில் கொட்டி வெற்றி வீரராகவே வலம் வந்தவர். இந்த பூமி பந்தில், மனித குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும் வரை, சிவாஜி கணேசன் என்கிற சகாப்தத்துக்கு மரணமுமில்லை..காலமுமில்லை...! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com