அதிமுக ஆட்சியில் சில திட்டங்களை தொட்டுவிட்டுத்தான் சென்றீர்களே தவிர எதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கின்ற பிக்கல் பிடுங்கலிலிருந்து கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு நீர்வளத்துறையில் நடைபெறும் திட்டங்கள் குறித்து குறை சொல்லி பேசி இருக்கிறார். எங்களை குறை சொல்வது ஒருபுறம் இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி காவிரி-குண்டாறு இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி, சரபங்கா திட்டம், அத்திக்கடவு- அவினாசி ஆகிய திட்டங்கள் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கிறதே என்பதில் எனக்கு ஆச்சரியம். எதிர்க்கட்சித் தலைவரே, நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது திட்டங்களின் பெயர்களை உச்சரித்துவிட்டு சில திட்டங்களை தொட்டுவிட்டுத்தான் சென்றீர்களே தவிர எதையும் முழுமையாக நிறைவேற்றவே இல்லை.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 11,400 கோடி வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தீர்கள். கோரிக்கை வைத்ததோடு சரி. ஒரு ரூபாயும் நீங்கள் அந்த 11,400 கோடியில் வாங்கவில்லை என்பது தங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. சரபங்கா திட்டத்திற்கு 565 கோடி செலவு செய்தீர்களே தவிர, 10 ஏரிகளுக்காவது தண்ணீர் கொடுத்தது உண்டா? தண்ணீரை ஏரிகளுக்கு எடுத்துச் செல்ல ஒரு அங்குலம் குழாய் (pipe) ஆவது புதைத்ததுண்டா? நீரேற்று நிலையம்(Pumping Station) கட்டி முடிக்காமலேயே போய்விட்டீர்கள். அதுமட்டுமல்ல, முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமான நில எடுப்பு பணிகளை மறந்தே போனீர்கள்.