இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியுமென 14 உயிர்களைப் பறித்த அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கையானது நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது. ஒருநபர் ஆணையத்தின் விசாரணைக்காக நானும் நேர்நின்று, இதில் ஆளும் வர்க்கம் நிகழ்த்திய அநீதிகளையும், அநியாயங்களையும் எடுத்துரைத்த நிலையில், இன்றைக்கு தூத்துக்குடி மக்கள் பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் விதமாக வெளிவந்திருக்கும் ஆணையத்தின் அறிக்கையை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது, அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டது அன்றைய அதிமுக அரசு. பேரணி நடைபெற்ற இடத்திற்கு அப்பால் தொலைதூரத்திலுள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அம்மையார் ஜான்சி படுகொலை செய்யப்பட்டார் என்பதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார் என்பதுமான இரு சம்பவங்களே, அன்றைய அரசு திட்டமிட்டு நிகழ்த்தியப் பச்சைப்படுகொலை இதுவென்பதை ஐயத்துக்கு இடமின்றி வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.