
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிய அரசின் ரகசிய ஆவணம் ஆங்கில பத்திரிகைக்கு எப்படி கிடைத்தது? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018-ல் ஜெயலலிதாவின் அரசுதான் ஆணையம் அமைத்தது. அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து சிபிஐயும் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக இந்த திமுக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை 3,000 பக்கங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. இந்த அரசும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு ஊடகங்கள் தேவையற்ற விவாதங்களை கட்டமைத்து வருகின்றன.
இதையும் படிக்க- சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்!
அரசிடம் உள்ள ரகசிய ஆவணம் ஒன்று, அந்த ஆங்கில ஏட்டினருக்கு எப்படிக் கிடைத்தது? அந்த ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலைக் கசியவிட்டார்களா? அல்லது அரசு ரகசியத்தைக் காக்க முடியாத இந்த அரசின் கையாலாகாத்தனமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அருணா ஜெகதீசன் அறிக்கையை அந்த ஆங்கில ஏட்டாளர்களும், ஆட்சியாளர்களும் இணைந்தே பாதுகாப்பு மிகுந்த தலைமைச் செயலகத்தில் இருந்து திருடிச் சென்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
அரசிடம் இருந்த ரகசிய ஆவணம், செய்தி நிறுவனம் கைக்குப் போக காரணமாக இருந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.