போதைப் பொருளுக்கு அடிமையாகும் மாணவிகள்: முதல்வர் ஸ்டாலின் கவலை

போதைப் பொருள் பழக்கத்திற்கு மாணவிகள் சிலரும் அடிமையாகி வருவது கவலை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
போதைப் பொருளுக்கு அடிமையாகும் மாணவிகள்: முதல்வர் ஸ்டாலின் கவலை
Updated on
2 min read

போதைப் பொருள் பழக்கத்திற்கு மாணவிகள் சிலரும் அடிமையாகி வருவது கவலை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரியின் பவள விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, 75-ஆவது ஆண்டு பவளவிழாவை இன்று நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். இந்த பவளவிழா நிகழ்ச்சிக்கு, இந்தக் கல்லூரியினுடைய நிறுவனத்திற்கு வருகை தந்து உங்களையெல்லாம் சந்திக்கிற, இந்த நிர்வாகத்தைப் பாராட்டுகிற, வாழ்த்துகிற வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன். தமிழ்நாடு என்பது, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் 21 தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது. 

தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளது. 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் இருக்கிறது. 40 பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளது. 30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளது. 30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளது. இப்படி நான் சொல்லிக் கொண்டே போக முடியும். கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால், நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. பி.எஸ்.ஜி போன்ற பல்வேறு அறக்கட்டளைகள், தங்களது கல்வித் தொண்டை 75 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதுதான் இதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. 

இந்த வளர்ச்சியை, இந்தியாவே வியந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய தமிழ்நாட்டு அறிவுச் சக்தியை வளர்ப்பதையே, தமிழ்நாடு அரசு தன்னுடைய கடமையாக நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும் உயர்கல்வித் துறையாக இருந்தாலும் உன்னதமான பல்வேறு திட்டங்களைச் இன்றைக்கு செயல்படுத்தி வருகின்றன. அனைவர்க்கும் கல்வி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் அடிப்படையான கல்வி, ஆரோக்கியமான கல்வி, உடற்கல்வி, உறுதி மிக்க மனவளக்கலை ஆகியவற்றைப் பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது. அனைவர்க்கும் உயர்கல்வி, அனைவர்க்கும் ஆராய்ச்சிக் கல்வி, திறன்மேம்பாட்டுக் கல்வியைத் தமிழக உயர்கல்வித் துறை வழங்கி வருகிறது. நான் மட்டும் முதல்வன் அல்ல, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே நான் முதல்வன் திட்டத்தை நம்முடைய அரசு இன்றைக்கு செயல்படுத்தி வருகிறோம். 

இன்னும் ஐந்து, பத்தாண்டு காலத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் அடைய இருக்கும் தகுதியையும், உயர்வையும் நினைத்து நான் உள்ளபடியே பூரிப்படைகிறேன். அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக, நம் மாநில இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. அதேநேரத்தில், இளைஞர் சமுதாயம் குறித்த ஒருவிதமான கவலையும் எனக்கு இருக்கிறது. போதைப் பொருள் பழக்கத்திற்கு ஒரு சிலர் அடிமையாவது கவலையாக இருக்கிறது. அதற்காகவே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். காரணம், அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டாக வேண்டும். புதிதாக யாரும் அடிமையாகாமல் தடுத்தாக வேண்டும். ஒரு மாணவன் அடிமையாவது என்பது, அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கே அது தடையாகிறது. அதிலும் குறிப்பாக, மாணவிகள் சிலரும் அந்தப் பழக்கத்தில் அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது.

நல்ல கல்வியுடன், நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் கடமை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு. இந்த நிகழ்ச்சியின் மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்துக் கல்லூரி நிறுவனங்களுக்கும் நான் ஒரு வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். ஒரு பெருமைமிகு கல்லூரியின், பவளவிழாவில் கலந்து கொண்ட மனநிறைவுடன் நான் சென்னைக்கு திரும்புகிறேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com