சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொலைக்காட்சி நிருபரின் உடல் உறுப்புகள் தானம்

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொலைக்காட்சி நிருபரின் உடல் உறுப்புகள் தானம்
Published on
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

திருவள்ளூர் அருகே பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சேகரின் மகன் சந்தானம்(32). இவருக்கு திருமணமாகி நந்தினி(31) என்ற மனைவியுடன், செஞ்சிபனம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார். 

இவர் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டாரப் பகுதியில் தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பூண்டியிலிருந்து திருவள்ளூர் நோக்கி சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம் சக நிருபரான ஏழுமலையை அமர வைத்து வந்த கொண்டிருந்தாராம். அப்போது சதுரங்கபேட்டை பகுதி சாலை வளைவில் இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, சாலை பக்கவாட்டில் நின்றிருந்த பொக்லைன் வாகனம் மீது மோதி, எதிரே வந்த தனியார் பேருந்து மீது விழுந்ததில் தலைக்கவசம் உடைந்து படுகாயம் அடைந்தார். உடன் வந்த சக நிருபர் ஏழுமலை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை அளித்தும், சனிக்கிழமை நள்ளிரவில் மூளைச்சாவு அடைந்த நிலையில், கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி நந்தினி மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர். 

இதுதொடர்பாக பென்னூர்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே இவர் தனியார் தொலைக்காட்சியில் பணியில் இருந்த போது கடந்த 2015 இல் திருமணம் நடைபெற்ற 4-ஆவது நாளிலேயே சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் சுயநினைவு இன்றி தீவிர சிகிச்சைக்கு பின் மீண்டும் நினைவு திரும்பியவர். தற்போது வேறொரு தனியார் தொலைக்காட்சியில் ஊத்துக்கோட்டை வட்டார நிருபராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இவருடைய மனைவி நந்தினி திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் அடுத்த செஞ்சிபனப்பாக்கம் பகுதியில் தனது தாயார் வீட்டில் இருந்த போது கடந்த 2019-இல் கால் இடரி கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் உடைந்து சிகிச்சையில் இருந்து மீண்டவர். 

தொடர்ச்சியாக கணவன், மனைவி விபத்தில் சிக்கிய நிலையில், தற்போது கணவன் மூளைச்சாவு அடைந்திருப்பது அவருடைய குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கணவரை இழந்து வறுமையில் வாடும் அவரது மனைவிக்கு அரசு வேலை அல்லது நிவாரண உதவிகள் வழங்கவும் முன்வரவும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.