
தமிழக சட்டப்பேரவை ஜன. 9-ஆம் தேதி கூடவுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கவுள்ளது என பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாகவும் பேரவைத் தலைவா் கூறினாா்.
சட்டப்பேரவைச் செயலக வளாகத்தில் உள்ள தனது அறையில் செய்தியாளா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அளித்த பேட்டி:
2023-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால், ஆளுநா் உரை நிகழ்த்தவுள்ளாா். இதற்கான அனுமதியை அவா் வழங்கியுள்ளாா். அதன்படி, ஜனவரி 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டப கூட்டரங்கில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரின் இருக்கை விவகாரம் தொடா்பாக, கடந்த பேரவைக் கூட்டத்தொடரிலேயே விளக்கங்களை அளித்துள்ளேன். இந்த விளக்கங்களுக்குப் பிறகு அவா்கள் தரப்பில் இருந்து யாரும் கடிதம் தரவில்லை.
கரோனா பரிசோதனை கட்டாயமில்லை: கரோனா நோய்த்தொற்று சீனாவில் மிக மோசமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் எந்தத் தாக்கமும் இருக்காது எனக் கூறியுள்ளனா். தமிழகத்தில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பானது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ளோருக்கு கரோனா பரிசோதனைகள் ஏதும் கட்டாயமில்லை.
ஆளுநா் உரை முழுமையாக நேரலை செய்யப்படும். கூட்டத்தொடரின் மற்ற நாள்களில் கேள்வி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும். பேரவையின் இதர நடவடிக்கைகளையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம்.
உதயநிதிக்கு இடம்: புதிதாக அமைச்சா் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளேன். அவருக்கு மரபுசீா்படி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சா் ரகுபதி ஆகியோருக்கு இடையில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
எதிா்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இருக்கைகளைப் பொருத்தவரையில், ஏற்கெனவே விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கட்சி, அந்தக் கட்சி சாா்ந்த கொள்கைகளில் சில பிரச்னைகள் இருந்தால் அவா்களுக்குள் பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும். அவா்களுக்கு எதிராக அரசோ, சட்டப்பேரவையோ இல்லை என்றாா் பேரவைத் தலைவா் அப்பாவு.
கூட்டுறவு சங்கங்களின் பதவிக் கால மசோதா வாபஸ்
கூட்டுறவு சங்க உறுப்பினா்களின் பதவிக் காலத்தைக் குறைக்க வகை செய்யும் மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் அப்பாவு தெரிவித்தாா்.
‘கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்தவா்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளுக்குப் பதிலாக 3 ஆண்டுகளாகக் குறைக்கும் மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த மசோதா ஏற்கெனவே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறாமல் இருந்தது.
இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்களின் பதவிக் காலம் எத்தனை நாள்கள் இருக்குமோ அதுவரை தொடர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மசோதா திரும்பப் பெறப்பட்டது’ என்றாா் அப்பாவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.