/

‘தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி’: வேட்டி- சேலை பிரச்னை குறித்து இபிஎஸ் அறிக்கை

வேட்டி - சேலை நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:13 am

DIN

வேட்டி - சேலை நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்கப்படாததற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள வேட்டி - சேலை நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

2023ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலை நெய்யும் பணி இந்த ஆட்சியால் முடங்கிப் போயிருப்பதாக நெசவாளர்களும், கூட்டுறவு சொசைட்டிகளை சார்ந்தவர்களும் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.

ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதமும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கவேண்டிய நூல் நவம்பர் இறுதி - டிசம்பர் முதல் வாரத்திலும்தான் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும், துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரச் கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும்போது தறியில், நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால், துணி நெய்ய முடியாமல்  நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர். இதனால், 90 சதவிகித நெசவாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நூல்களை திருப்பி அரசுக்கே அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

2023ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று திமுக அரசை எச்சரிக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.