மாசி மகம்: திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் கடலில் தீர்த்தவாரி 

 பல்வேறு ஊர் கோயில்களின் பெருமாள் பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடற்கரையில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  திரண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள்
திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள்


காரைக்கால் :  காரைக்கால் மாவட்டம்,  திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத்தையொட்டி திருக்கண்ணபுரம் ஸ்ரீ  சௌரிராஜ பெருமாள் உள்ளிட்ட  பல்வேறு ஊர் கோயில்களின் பெருமாள் பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடற்கரையில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  திரண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

திவ்யதேசங்களில் ஒன்றான நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள், காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு  மாசி மாத பௌர்ணமி நாளில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்வது மிகுந்த சிறப்பை பெற்ற விழாவாக பல்லாண்டுகளாக  நடைபெற்றுவருகிறது.

இதையொட்டி ஸ்ரீ சௌரிராஜ பெருமாளும், திருமருகல் ஸ்ரீ வரதராஜ பெருமாளும் தனித்தனி பல்லக்கில்  திருமலைராயன்பட்டினம் வெள்ளை மண்டபத்திற்கு புதன்கிழமை பகல் 12  மணியளவில் எழுந்தருளினர். இங்கு ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீற்றிருக்கும் வகையில் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கிட்டு பெருமாளை வழிபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் எம்.நாகதியாகராஜன் மற்றும் பட்டினச்சேரி மீனவ கிராமப் பஞ்சாயத்தார்களுக்கு வெள்ளை மண்டபத்தில் பட்டாச்சாரியர்கள் மரியாதை செய்தனர்.

பிற்பகல்  பவழக்கால் சப்பரத்தில் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு வெள்ளை மண்டபத்திலிருந்து  புறப்பாடானது. இவரைத் தொடர்ந்து திருமருகல் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள், ஸ்ரீ ரெகுநாத பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், நிரவியில் உள்ள ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் ஆகியவை பட்டினச்சேரி கிராமம்  வழியே கடற்கரைக்கு திரளான பக்தர்கள் சூழ சென்றன. மீனவ கிராம முக்கிய பிரமுகர்கள், கிராம எல்லையில் சுவாமிகள் நுழைந்ததும், சம்பிரதாய முறைப்படி சுவாமிகளை வரவேற்றனர்.

எல்லா பெருமாள்களும் தனித்தனி பல்லக்கில் வீற்றிருந்தவாறு 4 மணியளவில் கடலில் இறங்கி மூன்று முறை சுற்றி பக்தர்களுக்கு தீர்த்தவாரி செய்தன.  பின்னர் கடலோரத்தில் கட்டுமரத்தை காலாக நட்டு போடப்பட்டிருந்த பந்தலில் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் இருந்த சப்பரம் இறக்கிவைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சாற்றி, ஏராளமான பழங்களுடன்  அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 கடற்கரை தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com