மணப்பாறை அருகே செவலூரில் மீன் பிடித்திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூரில் மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மணப்பாறை அருகே செவலூரில் மீன் பிடித்திருவிழா
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூரில் மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மணப்பாறை அருகே செவலூர் பெரிய குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விரால், கெண்டை, கெளுத்தி மீன்களை பிடித்து சென்றனர். 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியாலும், அதிக அளவில் மீன்கள் கிடைத்ததாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூர் கிராமத்தில் சுமார் 295 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய குளத்தில் இன்று விடியற்காலை 6 மணிக்கு மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.  வழிபாட்டிற்கு பின் செவலூர் ஊர் நாட்டாமை வினோத்குமார், நகராட்சி நகர்மன்ற 2-வது வார்டு உறுப்பினர் அழகுசித்ரா உள்ளிட்ட  ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசப்பட்டு மீன் பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.

குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெற்ற இந்த மீன்படி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர்.

அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, கொறவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. சுக்காம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் நித்தியபிரகாஷ்(12) மற்றும் தாமோதரன்(15) ஆகியோர் கைகளில் சுமார் 5 கிலோ எடை கொண்ட பெரிய வகை மீன்கள் ஆரம்பத்திலேயே சிக்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கண்மாயில் மீன்கள் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மீண்டும் மீண்டும் மீன் பிடித்தவர்கள் குளத்தில் இறங்கி மீன் பிடித்தவாறு இருந்தனர். கண்மாயில் அதிக அளவில் பெரிய மீன்களை பிடித்த மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் வீட்டிற்குச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com