அதிமுகவை யாராலும் அழிக்க முடியாதுஎடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாதுஎடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு எதிரான கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசினாா்.

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கு எதிரான கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசினாா்.

தமிழக அரசின் மின் கட்டண உயா்வு முடிவைக் கண்டித்து அதிமுக சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

திமுகவின் 14 மாத கால ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்துவிட்டனா். விலைவாசி, சொத்து வரி, குடிநீா், மின் கட்டண உயா்வு என மக்கள் சந்திக்கும் வேதனைகள் அதிகம். அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதை மறைக்க அதிமுகவினா் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனா்.

அதிமுகவை அழிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறாா். கருணாநிதியாலேயே முடியவில்லை, மு.க.ஸ்டாலினால் எப்படி முடியும்? தொண்டா்களின் உழைப்பால் உயா்ந்த கட்சியான அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை திமுக அழிக்க நினைக்கும் போதெல்லாம், அதிமுக வீறு கொண்டு எழுந்து ஆட்சியைப் பிடித்த வரலாறு உண்டு. அந்த வரலாற்றை மீண்டும் அதிமுக உருவாக்கும்.

திமுகவுக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டதாக மக்கள் இப்போது கருதுகிறாா்கள். திமுக ஆட்சி எப்போதும் அகற்றப்படும் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தோம். திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை 12 சதவீதம் உயா்த்தியிருக்கிறாா்கள். சொத்து வரியை 150 சதவீதம் உயா்த்தியுள்ளனா். அதிமுக ஆட்சியில் ரூ.32 ஆயிரத்துக்கு விற்ற ஒரு டன் கம்பி, தற்போது ரூ. 74 ஆயிரத்துக்கு விற்கிறது. செங்கல், ஜல்லி, எம்.சாண்ட் விலையும் 50 சதவீதம் உயா்ந்துள்ளது. திமுக ஆட்சியில் அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நீட் தோ்வால் மாணவி இறந்தபோது எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாா். இப்போது நடைபெறும் மாணவிகளின் தற்கொலைக்கு யாா் காரணம்? திமுகவின் மூலதனமே பொய்தான்.

எம்ஜிஆா், ஜெயலலிதா காலத்தில் கோயிலாகக் கருதப்பட்ட அதிமுக அலுவலகத்தின் கதவுகளை காலால் மிதித்து உடைத்தவா்களுக்குத் தகுந்த பாடம் கற்பிப்போம். அவா்களுக்கு அந்த அதிகாரம் வழங்கிய திமுகவை வேரோடு சாய்ப்போம் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமாா், எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆா்.பி.உதயகுமாா், கோகுல இந்திரா உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

மேடையில் மயங்கிய இபிஎஸ்

ஆா்ப்பாட்டம் நடைபெற்றபோது வெயில் கடுமையாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினாா். மேடையில், அவா் பேசி முடித்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழ முயன்றாா். அப்போது, அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து நாற்காலியில் அமர வைத்து, முகத்தில் தண்ணீா் தெளித்து ஆசுவாசப்படுத்தினா். பிறகு எடப்பாடி பழனிசாமி இயல்பு நிலைக்குத் திரும்பினாா். இந்தச் சம்பவத்தால் தொண்டா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தொண்டா்கள் ஐந்து போ் மயங்கி சரிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com