நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி; உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!

ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி; உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!

ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றியது. இதில் பேரறிவாளனை மட்டும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்தது. 

இந்நிலையில், இந்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை பெற்று வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசு தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, தங்களை விடுதலை செய்யக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை நீதிபதிகள்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

பேரறிவாளன் வழக்கை குறிப்பிடவேண்டுமானால் நீங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று கூறிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தைப் போல அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தனர். 

தீர்ப்பிற்குப் பின்னர் வெளியே வந்த நளினி தரப்பு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஏழு பேரில் ஒருவரை விடுதலை செய்துவிட்டீர்கள், நளினியை விடுதலை செய்யாமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம்; வெகுவிரைவில் நளினி விடுதலை செய்யப்படுவார்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com