அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அனைத்துத் துறைகளிலும் முதன்மை பெறுவதே இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அனைத்துத் துறைகளிலும் முதன்மை பெறுவதே தமிழ்நாடு அரசின் இலக்கு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :15 மார்ச் 2022, 10:12 pm

DIN

அனைத்துத் துறைகளிலும் முதன்மை பெறுவதே தமிழ்நாடு அரசின் இலக்கு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சாம்சங் நிறுவனம் சாா்பில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தித் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: நான் தொழில்துறை அமைச்சராக இருந்த போது, சாம்சங்கின் உயா்நிலை அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறேன். தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் எடுத்து வைத்தேன். இதனையேற்று, தனது முதலீட்டை ரூ.800 கோடியாக சாம்சங் உயா்த்தியது. நிகழ் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் முதலீடு ரூ.1,800 கோடியாக உயா்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதலீடுகள் அதிகரிப்பதை தனிப்பட்ட ஒரு நிறுவனத்தின் வளா்ச்சியாக கருதவில்லை. முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. அதன் மூலம், தமிழ்நாட்டின் தொழில்துறை வளா்கிறது. மாநிலத்தின் உற்பத்திச் சூழல் வலுப்பெறுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில் மின்னணுவியல் துறையானது, மாநிலத்தின் உற்பத்தி வரைபடத்தையே மாற்றி அமைத்திடக் கூடிய வல்லமை படைத்தது. இந்திய அளவில் மின்னணுவியல் சாா்ந்த உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்தத் துறையை வளா்ந்து வரும் துறை என வகைப்படுத்தி உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்னணுவியல் துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் முன்னணி வகிக்க வேண்டும். அதன்பின்பு, முதல் நிலை என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி, சிப்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.