ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் ராஜபட்ச சகோதரர்கள்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபட்ச சகோதரர்களுக்கு இந்தியா எப்போதும் தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் கூறியதாவது:
இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது.
திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த ராஜபட்ச இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது. ஆனாலும் கடல் வழியாக அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் ராஜபட்ச சகோதரர்கள் தான். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது.
போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபட்ச சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.