
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்ணமல்லியில் ஆக்கிரமிப்பில் உள்ள 20 ஏக்கர் நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை பாகுபாடின்றி அகற்றி அங்கு மக்கள் பயன்படும் வகையில் அரசு கட்டடங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட இருந்த மக்களை அதிகாரிகளும், போலீசாரும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்னமல்லி ஊராட்சியில் சுமார் 2500 மக்கள் வருகின்றனர். இங்கு உள்ள ஐயர் கண்டிகையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலை, கால்வாய்களை ஆக்கிரமித்து 11 பேர் விவசாயம் செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் சில மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் கிராம மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த போது சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நட்ராஜ், கெட்ணமல்லி ஊராட்சி மன்ற தலைவர் நதியா ரவி, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் தீபன் ராஜ் கிராம மக்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, மக்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாகுபாடின்றி அகற்றி பள்ளி கட்டடம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், நூலகம், பேருந்து நிறுத்தம், விளையாட்டு மைதானம் போன்றவைகளை அமைத்து மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்றனர்.
பின்னர், கிராம மக்களிடம் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், நெல் பயிரிடப்பட்டுள்ள நிலங்களுக்கு மட்டும் 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிட்டால் கவரப்பேட்டை - சத்தியவேடு தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரித்த பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.