நெற்பயிர்களை நவ.15-க்குள் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. 
நெற்பயிர்களை நவ.15-க்குள் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்
Published on
Updated on
2 min read

சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க, முதல்வரின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், முதல்வர் 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக்கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து, உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர், 10.38 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்
 தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 15.11.2022 ஆகும்.
 கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இம்மாவட்ட நெல் விவசாயிகள் 15.12.2022க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இடம்
பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் “விவசாயிகள் கார்னர் எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற அடங்கல் அல்லது இ-அடங்கல் அல்லது விதைப்பு
அறிக்கை, வங்கிக் கணக்குக் புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல்கள்.

செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணத்தொகை 
காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு விவசாயிகளின் நிதிச்சுமையினை பெருமளவு குறைக்கும் வகையில், காப்பீட்டுக் கட்டணத் தொகையில் பெரும்பங்கு மாநில அரசும், ஒன்றிய அரசும் செலுத்திவிடும் என்பதால், விவசாயிகள் சம்பா நெல், மக்காச்சோளத்துக்கு காப்பீட்டுத் தொகையில் (Sum Insured), 1.5 சதவீதத் தொகையையும், பருத்தி, வெங்காயத்துக்கு காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதத் தொகையையும் செலுத்தினால் போதுமானது. விவசாயிகளின் பங்களிப்புக் கட்டணத்தை செலுத்தியதற்கான இரசீதை பொதுச் சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. ஆகையால், விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களையோ அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அல்லது வங்கிகளையோ அணுகலாம்.
தமிழக விவசாயிகளின் நலனுக்காக அதிக நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் இப்பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்கள் பயிரை பதிவுசெய்து, பயனடையுமாறு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com