தாய், தந்தையாக இருப்பேன்: அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபை சென்ற அன்பில் மகேஸ்

தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன் என்று திருச்சி விமான நிலையத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
தாய், தந்தையாக இருப்பேன்: அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபை சென்ற அன்பில் மகேஸ்
தாய், தந்தையாக இருப்பேன்: அரசுப் பள்ளி மாணவர்களுடன் துபை சென்ற அன்பில் மகேஸ்

திருச்சி: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 68 மாணவர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன் என்று திருச்சி விமான நிலையத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

இணையவழி விநாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற 68 மாணவ, மாணவிகள், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று துபைக்கு கல்விச் சுற்றுலா புறப்பட்டனர்.

மாணவ, மாணவியருடன் விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், மாணவ, மாணவிகளுக்கு எந்த திறமையாக இருந்தாலும் அதனை ஊக்குவித்து, அரசு சார்பில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், இன்று துபை செல்வது, புதிய அனுபவமாக பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு அமையும். நாம் பள்ளியில் படிக்கும் போது, பக்கத்தில் இருக்கும் மாவட்டத்துக்குத்தான் சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். ஆனால் தற்போது தமிழக அரசால், பள்ளி மாணவர் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அவர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று பத்திரமாக அழைத்து வர வேண்டியது எனது பொறுப்பு. இந்த நான்கு நாள்களுக்கும் அவர்களுக்கு தாயாவும் தந்தையுமாக நான்தான் இருக்கப்போகிறேன். 

இந்தச் சுற்றுலாவுக்கு தமிழக அரசிடம் அனுமதி மட்டும்தான் பெற்றுள்ளோம். இது சிஎஸ்ஆர் நடவடிக்கை மூலம் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே விநாடி- வினா போட்டி நடத்தி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள்தான் இவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வியில் சிறந்து விளங்கும் சுமாா் 60 மாணவா்கள் மற்றும் அவா்களுடன் செல்ல சில ஆசிரியா்களை ஐக்கிய அரசு அமீரக நாட்டிலுள்ள துபை நகரத்துக்கு இலவசமாக கல்விச் சுற்றுலா மற்றும் ஷாா்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அந்த வகையில், கடந்த 8.9.2021 முதல் 8.11.2021 வரை இணைய வழியில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய, தற்போது பிளஸ் 1 வகுப்பு பயிலும் 68 மாணவ, மாணவிகள் மற்றும் 5 ஆசிரியா்கள், பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் 3 போ் என மொத்தம் 76 நபா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் துபைக்கு நான்கு நாள்கள் (நவ.10 முதல் 13 வரை) கல்விச் சுற்றுலாவுக்கும், ஷாா்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com