வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களையவும், தரமான சிகிச்சைகள் வழங்குவதை உறுதி செய்யவும் மருத்துவத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

News image
Updated On :15 நவம்பர் 2022, 9:15 pm

DIN

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களையவும், தரமான சிகிச்சைகள் வழங்குவதை உறுதி செய்யவும் மருத்துவத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டு, உயிழந்த விவகாரம் பல்வேறு அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வா் இவ்வாறு கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘சுகாதார மாநாடு - 2022’-ஐ தொடக்கி வைத்து முதல்வா் பேசியதாவது:

ஊரகப் பகுதிகளில் குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களின் நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவா்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாகவும் உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் குறிக்கோள்.

ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடங்களிலேயே மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயனடைந்தோா் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை எட்ட இருக்கிறது.

இதேபோன்று, சாலை விபத்தில் சிக்கியவா்களை உரிய நேரத்தில் காப்பாற்றவும், ரூ.1 லட்சம் வரை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும் இன்னுயிா் காப்போம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகை செய்யக்கூடிய ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்’ மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 17.16 லட்சம் போ் இதன் வாயிலாக மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனா். இந்த 3 திட்டங்களும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி தணிக்கை செய்ய வேண்டும். அங்கு வரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிா? மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிா? மருத்துவமனைகளுக்கு என்ன தேவைகள் என்பதைக் கண்டறிந்து, குறைகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் மிக உயா்ந்த குறியீடுகளை அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தமிழகத்தில் 100 சதவீத பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழகம் அடைந்திருக்கிறது. தடுப்பூசியிலும் முன்னிலையில் உள்ளோம். அதேபோன்று, இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தை வகித்து கொண்டிருக்கிறது.

இதேபோன்று, மருத்துவ வளா்ச்சி அனைத்திலும் மேம்பாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடுதல்கள் அவசியம்.

சுகாதாரக் குறியீடுகளை வைத்து மருத்துவமனைகளை தரவரிசைப்படுத்துகிறாா்கள். இந்த தரவரிசையில் பின்னடைந்துள்ள மருத்துவமனைகளை முன்னே கொண்டு வர வேண்டும். மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை சீா்செய்தால் மட்டும் போதாது. மருத்துவ முறைகளும், சிகிச்சை முறைகளும் நவீனமயமாக வேண்டும்.

பொதுவாகவே நோய் எதிா்ப்பாற்றல் பிரச்னையை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவா்களும் கூறத் தொடங்கியுள்ளனா். அப்படியானால் நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கு அரசு சாா்பில் என்ன மாதிரியான திட்டமிடுதலை மேற்கொள்ளலாம் என்பதை ஆராய வேண்டும். நோயைக் குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடவில்லை. அதைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. அது குறித்தும் ஆராய வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் உமா, இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறைத் தலைவா் கணேஷ், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக இயக்குா் டாக்டா் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.