விடியோவில் உங்களைப் பார்த்தே தெரியாது என்கிறீர்களே? சத்தியம் சுடும்: நீதிபதி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜரான சுவாதியிடம், விடியோவில் உங்களைப் பார்த்தே நீங்கள் தெரியாது என்று சொல்கிறீர்களே என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கோகுல்ராஜ் இறுதிச் சடங்கு.. கோப்பிலிருந்து..
கோகுல்ராஜ் இறுதிச் சடங்கு.. கோப்பிலிருந்து..


மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜரான சுவாதியிடம், விடியோவில் உங்களைப் பார்த்தே நீங்கள் தெரியாது என்று சொல்கிறீர்களே என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்ட சுவாதியிடம், நீதிபதிகள் கேள்விகளைக் கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.

பல கேள்விகளுக்கு சுவாதி தெரியாது என பதிலளித்த நிலையில், உண்மையை மட்டுமே உங்களிடம் இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. கோகுல்ராஜூடன் விடியோவில் இருக்கும் உங்களைப் பார்த்தே நீங்கள் தெரியாது என்கிறீர்களே.  உண்மையை மறைப்பது ஏன்? 

கோகுல்ராஜ்
கோகுல்ராஜ்

காவல்துறை கொடுத்த வாக்குமூலத்தையே கீழமை நீதிமன்றத்தில் சொன்னதாக சுவாதி கூறினார். அப்போது, குழந்தை மீது சத்தியம் செய்துவிட்டு சிசிடிவியில் இருப்பது தான் இல்லை கூறுகிறீர்களே?

சாட்சியத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு தற்போது மிரட்டினார்கள் என்பதா? உண்மையைக் கூறுவதால் ஏதேனும் பிரச்னை ஏற்படும் என்றால் கூறிவிடுங்கள். தெரிந்தவற்றை அனைத்தையும் சொல்லிவிட்டேன் என்று சுவாதி கூறியதையடுத்து சத்தியம் சுடும் என்று நீதிபதி கூறினார்.

எவ்வளவு நாள்கள் உண்மையை மறைக்க முடியும்? நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி, எது சரி, எது தவறு என்று உங்களுக்குத் தெரியும். உண்மையை மறைத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். கீழமை நீதிமன்றத்தைப் போலவே, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, நவம்பர் 30ஆம் தேதி சுவாதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

மயக்கமடைந்த சுவாதி

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சுவாதியிடம், நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், திடீரென சுவாதி மயங்கி விழுந்தார். உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை அழைத்து வரப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் வாக்குமூலம் பெறப்பட்டுக் கொண்டிருந்த போது இடையே 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. கோல்குல்ராஜ் பற்றியும், கொலை நடந்தது பற்றியும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். இந்த நிலையில், விசாரணையின்போது சுவாதி திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, மயக்கம் தெளிந்ததும், மீண்டும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.

விசாரணையின்போது நடந்தது என்ன?
கொலை நடந்த போது, கோகுல்ராஜ் உடன் ஒரு பெண் நடந்து வரும் சிசிடிவி காட்சியை சுவாதிக்குப் போட்டுக் காண்பித்து, கோகுல்ராஜுடன் நடந்து செல்லும் அந்தப் பெண் யார் என்று மூன்று முறை நீதிபதிகள் கேட்டதற்கு தெரியாது என்று கண்கலங்கியபடியே பதிலளித்தார்.

உண்மையை மனசாட்சிக்கு உள்பட்டு சொல்லுங்கள் என்று நீதிபதிகள் கூறியபோதும், சிசிடிவி பதிவின் க்ளோசப் காட்சியைப் பார்த்ததும் சுவாதி கண்ணீர் விட்டு அழுததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.

சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது ஏன்?

நீதித்துறை மனசாட்சியை திருப்திபடுத்த சுவாதியை விசாரிக்க விரும்புவதாக உயர் நீதிமன்ற கிளை கூறியிருந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு, சுவாதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சுவாதி நீதிமன்றத்துக்கு இன்று காலை அழைத்துவரப்பட்டிருந்தார்.

நாமக்கல் மாவட்டம், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கொலை தொடா்பாக 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கா் உள்ளிட்ட 5 போ் விடுதலை செய்யப்பட்டனா். ஆயுள் சிறைத் தண்டைனையை ரத்து செய்யக் கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

கோகுல்ராஜின் தாய் சித்ரா இந்த வழக்கில் சங்கா் உள்ளிட்ட 5 பேரின் விடுதலையை எதிா்த்து மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் அமா்வு, கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தொடக்கக் காலத்தில் சுவாதி முக்கிய சாட்சியாக இருந்தாா் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் பிறரது வாக்குமூலங்களைப் பெற்ற போது, இடையில் ஏதோ நடைபெற்றதாக சந்தேகம் எழுகிறது. நீதித் துறையின் மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் வகையில், சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க நீதிமன்றம் விரும்புகிறது. இது கட்டாயம், தேவையான ஒன்று.

எனவே, சுவாதியை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அறையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர். 

இதன் அடிப்படையில், சுவாதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு, நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, கோகுல்ராஜ் கொலை தொடர்பாக நீதிபதிகள் முன்னிலையில் சுவாதி வாக்குமூலம் அளித்து வந்த நிலையில், உண்மையைத்தான் உங்களிடம் இந்த நீதிமன்றம் எதிர்பார்ப்பதாகவும், பொய்யான தகவல்களைச் சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறியதாக தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com