மேட்டூர்: மேட்டூர் அணையின் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு காலம் நீட்டிப்பு.
மேட்டூர் அணையின் கால்வாய் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும் நாமக்கல் மாவட்டத்தில் 11,377 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,23 0ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.
கிழக்குக்கரை கால்வாய் மூலம் 27,000 ஏக்கர் நிலமும் மேற்கு கரை கால்வாய் மூலம் 18,000 ஏக்கர் நிலமும் மொத்தத்தில் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும். பாசன பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசன தேவை குறையும்.
பாசன காலம் முடிவடைந்த பிறகும் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறப்பு காலம் நீட்டிக்கப்படும்.
நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் குறித்த நாளுக்கு முன்பாக ஜூலை 16ஆம் தேதி முதல் 137 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 6.5 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று நீர்வளத்துறை பரிந்துரையின் பேரில் தண்ணீர் திறப்பு காலம் நவம்பர் 30-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை 47 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு காலம் நீட்டிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு மேற்கு கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.