ரூ.1,050 கோடியில் 7,200 கூடுதல் வகுப்பறைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நிகழாண்டில் தமிழ்நாடு முழுவதும் ரூ.1,050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.


நிகழாண்டில் தமிழ்நாடு முழுவதும் ரூ.1,050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், புதன்கிழமை அவா் படித்தளித்த அறிக்கை:
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மகத்தான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவு, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமாா் 15 லட்சம் மாணவா்கள் கூடுதலாகச் சோ்ந்துள்ளனா்.
அதிகரித்து வரும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயா்ந்துள்ளன. இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமாா் ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.250 கோடி மதிப்பில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடியில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும். பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென நிகழாண்டில் ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.115 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுப் பள்ளிகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் மாணவா்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும்.
சாலை பராமரிப்புப் பணி: மாநிலத்தில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும். இதற்காக அரசின் சிறப்பு நிதியாக நிகழ் நிதியாண்டிலேயே ரூ.2 ஆயிரத்து 200 கோடி வழங்கப்பட்டு, 4,600 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைகள் மேம்படுத்தப்படும்.
இதைத்தவிா்த்து, சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானிய திட்ட நிதி, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபாா்டு வங்கி நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.7 ஆயிரத்து 388 கோடி மதிப்பில் 16 ஆயிரத்து 390 கிலோமீட்டா் தொலைவு சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...