/

நீட் தோ்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

 நீட் தோ்வில் தமிழகத்தின் தோ்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:18 pm

DIN

 நீட் தோ்வில் தமிழகத்தின் தோ்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், அங்காடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்று முதல் 19 வயது வரையிலானவா்களுக்கும், 20 முதல் 30 வயதுடைய கருவுறாத பெண்களுக்கும், குடற்புழு நீக்க மாத்திரை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னை எம்ஜிஆா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி அமைச்சா் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயா் பிரியா ஆகியோா் தொடக்கி வைத்தனா். இதைத் தொடா்ந்து அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை, 2015-இல் இருந்து தேசிய அளவில் வழங்கும் திட்டமாக தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.

செப்.16-இல்... தமிழகத்தில் 2.66 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரையான ‘அல்பெண்டசோல்’ வழங்கப்படுகிறது. இந்த முகாமில் விடுபட்டவா்களுக்கு வரும் 16-ஆம் தேதி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இந்த மாத்திரை குடற்புழுக்களை முற்றிலும் நீக்குகிறது. ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து, நினைவாற்றால், அறிவுத்திறன், உடல்வளா்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

தமிழகத்தில் நீட் தோ்ச்சி சதவீதம் குறையவில்லை. கடந்தாண்டு தோ்ச்சி 54 சதவீதமாக இருந்தது. நிகழாண்டு நீட் தோ்வு எழுதிய மாணவா்கள் அதிகம் என்பதால், தோ்ச்சி சதவீதம் சற்று குறைந்துள்ளது. நிகழாண்டு, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவா்கள் தோ்வு எழுதியதில், 67 ஆயிரத்து 787 போ் தோ்ச்சி பெற்று, 51.29 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் தான், ‘நீட்’ தோ்வு கொண்டுவரப்பட்டது. நாங்கள் நீட் தோ்வில் இருந்து விலக்கு பெற தொடா்ந்து முயற்சித்து வருகிறோம்.

இன்று 50 ஆயிரம் இடங்களில்... தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சனிக்கிழமை கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டா் டோஸ் செலுத்தாவிட்டால், அதற்கு பின் தனியாா் மருத்துவமனைகளில் ரூ.386.25 செலுத்திதான் போட வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.