வீடு மாற்றும் போது மின்சாரம் பாய்ந்து மூவர் பலி: ஒருவர் காயம்

தருமபுரியில் வீடு மாற்றும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தனர்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார்.

தருமபுரியில் வீடு மாற்றும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தனர்.

தருமபுரி சந்தைப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன்(52). இவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் 2-ஆம் தளத்தில் இலியாஸ் பாஷா(70) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது இவர் வேறு இடத்துக்கு குடிபெயர ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக, வியாழக்கிழமை (22-ஆம் தேதி) காலை, வீட்டிலிருந்த பொருள்களை வாகனத்தில் ஏற்றி புது குடியிருப்புக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

இலியாஸ் பாஷா தங்கியிருந்த வீட்டில் 2 பீரோக்களை வைத்திருந்தார். இந்த பீரோக்களை கயிறு மூலம் 2-ஆவது மாடியில் இருந்து கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியில் தருமபுரி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த மணி மகன் கோபி(23), மேளக்கார தெருவைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் மகன் குமார்(23) ஆகிய 2 கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு இலியாஸ் பாஷா மற்றும் வீட்டு உரிமையாளர் பச்சியப்பன் ஆகியோரும் உதவியுள்ளனர். வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள மின்பாதைக்கும் கட்டடத்துக்கும் குறுகிய இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த இடைவெளியில் முதலில் 1 பீரோவை கயிறு மூலம் கீழே இறக்கியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, 2-ஆவது பீரோவை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பீரோ மின் பாதையில்  உரசியுள்ளது. இதில், 4 பேர் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில், வீட்டு உரிமையாளர் பச்சியப்பன், வாடகைக்குக் குடியிருந்த இலியாஸ் பாஷா, கூலி தொழிலாளி கோபி ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தனர். குமார் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com