வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுப் பணம்?

பொங்கல் பரிசு கொடுக்கும் நடைமுறையில் ஒரு புதிய மாற்றமாக, இம்முறை, பரிசுத் தொகை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பரிசுத் தொகை நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்படுமா?
பொங்கல் பரிசுத் தொகை நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்படுமா?

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு கொடுக்கும் நடைமுறையில் ஒரு புதிய மாற்றமாக, இம்முறை, பரிசுத் தொகை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படுமா? அல்லது பரிசுத் தொகுப்பு இல்லாமல் பணம் மட்டும் வழங்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்திருந்தன.

இதற்கிடையே, பணத்தை பத்திரமாக ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்வது, பணப்பட்டுவாடா செய்வது, அதற்கு பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட சிக்கல்களைத் தவிர்க்கும்முகமாக, குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கிடைத்திருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில், 14.6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் உள்ளன என்று தரவுகள் காட்டுகின்றன.

நியாயவிலைக் கடைகள் மூலம் இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு அல்லது ரொக்கம் அல்லது இரண்டும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் சுமார் 5,600 கோடி ரொக்கப் பணத்தை 2.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்னையும் இல்லாமல் விநியோகித்து வந்தனர். 

அதே வேளையில், தற்போது பரிசுத் தொகை வங்கியில் வரவு வைக்கப்பட்டு, அதனை பயனாளர்கள் ஒரு சில நாள்கள் எடுக்காமல் வங்கிக் கணக்கில் வைத்திருந்தாலும் கூட, அதன் மூலம் சில லட்சம் வட்டி ஈட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், இதுவரை, பொங்கல் பரிசுத் தொகையை வங்கியில் வரவு வைப்பது என்று தமிழக அரசு சார்பில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது என்றுதான் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகையை வழங்கும் முக்கிய முகமையாக இருக்கும் நுகர்பொருள் வாணிபக் கழகம் தரப்பில், தற்போது குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டையுடன் வங்கிக் கணக்கை இணைத்திருக்கிறார்களா? ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இ-சேவை மையத்தின் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில்தான், இதுவரை குடும்ப அட்டையுடன் 14.6 லட்சம் பேர் வங்கிக் கணக்கை இணைக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்த வாரத் தொடக்கத்தில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல இணைப் பதிவாளர்கள் சார்பில், கூட்டுறவு வங்கிகளில், இந்த 14.6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வங்கிக் கணக்கை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருப்பதால்தான், பொங்கல் பரிசுத் தொகை இந்த ஆண்டு நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், கூட்டுறவு வங்கிகளில், வாடிக்கையாளர்களின் தளத்தை விரிவுபடுத்துமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் முறையாக பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, ஒரு துண்டு கரும்புடன் ரூ.100 ரொக்கமாக வழங்கப்பட்டது.

அது முதல் 2015ஆம் ஆண்டு தவிர்த்து, ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு ரூ.2500ம் வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்பட்டது.

ஆனால், திமுக பொறுப்பேற்றதும், வெள்ள நிவாரணத் தொகை ரூ.4,000 வழங்கப்பட்டதால், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, 21 சமையல் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. இதற்கு மாநில அரசுக்கு ரூ.1,297 கோடி செலவானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

விவசாயிகள் மனு

பொங்கல் பரிசு தொகுப்புக்கான அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான பொருள்களை அண்டை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்படுகின்றன. மேலும், பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருள்களும் தரமானதாக இருப்பதில்லை. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படக்கூடிய பொருள்களை தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் வலியுறுத்தி,  தஞ்சாவூா், சுவாமி மலையைச் சோ்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழகத்தில் விளையும் பொருள்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது தொடா்பாக கூட்டுறவுத் துறை, வேளாண் துறைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com