குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு: எம்எல்ஏ கோரிக்கை

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு: எம்எல்ஏ கோரிக்கை
Published on
Updated on
1 min read


புதுக்கோட்டை: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) எம். சின்னதுரை தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

சிறுவன் புகழேந்தியின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் தொடர்பாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதிக்கு நேரில் சென்று சம்பவம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்ட பிறகு, திங்கள்கிழமை மாலை இதுகுறித்த அறிக்கையொன்றை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் அளித்தார்.

இதே கோரிக்கை மனுவை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

"சம்பவம் நடைபெற்றுள்ள பசுமலைப்பட்டி பகுதியைச் சுற்றி நார்த்தாமலை ஆவுடையான்காடு, மணியடிப்பட்டி, ஊரடிப்பட்டி, மெய்வழிச்சாலை, சமத்துவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

ஏற்கெனவே கடந்த 2001ஆம் ஆண்டு இதே பயிற்சித் தளத்தில் இருந்து பாய்ந்த துப்பாக்கிக் குண்டு சுமார் நான்கரை கி.மீ. தொலைவில் இருந்த சித்துப்பட்டி முருகேசன் என்பவரின் வயிற்றில் பாய்ந்தது. பல லட்சம் செலவழித்து அவர் உயிர் பிழைத்தார். அவருக்கு அரசின் சார்பில் எந்த நிதியும் வழங்கப்படவில்லை. தற்காலிகமாக அப்போதும் பயிற்சித் தளம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தகவல் எதுவும் உள்ளாட்சி அமைப்பிடம் கூட தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் தற்போதைய சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற உடன் அந்தக் குடிசைக்குச் சென்ற காவல் துறையினர், அங்கிருந்த ரத்தக்கரைகளை அழிக்க முயன்றுள்ளனர். துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளப் பகுதியில் சிறுவன் நடமாடியதாகக் கூறச் சொல்லி உறவினர்களை வற்புறுத்தியுள்ளனர். இதையெல்லாம் காவல் துறையினர் ஏன் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. 

எனவே, இந்தப் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும். நடந்தது என்ன என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவன் புகழேந்தி உயிரிழந்த தகவல் கிடைத்தவுடன் எம்எல்ஏ எம். சின்னதுரை தஞ்சைக்கு விரைந்தார். அங்கிருந்தபடி முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள அவசரத் தகவலில், உயிரிழந்த புகழேந்தியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com