அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, 51 இடங்களில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அவருக்கு சொந்தமான 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் , அதிமுக திருவாருர் மாவட்ட ச் செயலர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ
முன்னாள் அமைச்சர் , அதிமுக திருவாருர் மாவட்ட ச் செயலர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு மற்றும்  உறவினர்கள், ஆதரவாளர்கள் என மன்னார்குடியில் 4 இடங்கள் உள்பட  51 இடங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள காமராஜ் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜர் வீட்டில் இருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததை அறிந்ததும் அதிமுக வழக்குரைஞர்கள் வீட்டிற்கு வந்து அவர்களிடம் விளக்கங்கள் கேட்டனர். 

மன்னார்குடியில் வடக்கு வீதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் இல்லம்.

மேலும், அதிமுகவினர் காமராஜ் வீட்டின் முன்பு குவியத் தொடங்கினார். குவிந்த அவரது ஆதரவாளர்கள் அதிமுகவினர் திமுகவை கண்டித்தும், அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்தப்படுவதாக கோரி கண்டித்து கோஷமிட்டனர். இதனால் மன்னார்குடி பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் அவரது மூத்த மகன் இனியன், இளைய மகன் இன்பன்,உறவினர் வழக்குறைஞர் உதயகுமார், பைங்கா நாடு ராதாகிருஷ்ணன், ஆதரவாளர்  கிருஷ்ணமூர்த்தி, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மன்னார்குடியில் வடக்கு வீதியில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர்  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் இல்லத்தில் சோதனையால் ஈடுப்பட்டு வருவதை அடுத்து அவரது இல்லத்தின் முன் திரண்ட அதிமுகவினர்.

2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக ஆர்.காமராஜ் இருந்த போது அவருடைய பதவியை தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252 அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாருர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி (1) காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், (2) மருத்துவர் எம்.கே.இனியன், 3) மருத்துவர் எம்.கே.இன்பன், 4) ஆர்.சந்திரசேகரன் 5) பி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் 6) எஸ்.உதயகுமார் ஆகியோர்கள் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கினைத் தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு, அவரது மகன்கள் இனியன், இன்பன், மன்னார்குடி அதிமுக நகர செயலாளர் குமார், காமராஜின் வழக்குரைஞர் உதயகுமார், தஞ்சையில் உள்ள காமராஜின் சம்பந்தி மோகன், திருச்சியில் உள்ள ஓட்டல் பிளாசம், மற்றும் சென்னை முகப்பேரில் உள்ள காமராஜ் மனைவிக்கு சொந்தமான இடம், மற்றும் நீலாங்கரை, மயிலாப்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 49 இடங்களில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

அதில், ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலிலும், திருச்சி கேகே நகரில் உள்ள அவரது நண்பர் பாண்டியன் என்பவரது வீட்டிலும், திருச்சி தில்லைநகர் 11 வது குறுக்கு தெருவில் உள்ள பிளாஸம் ஹோட்டல் உரிமையாளர் இளமுருகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com