தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழா

தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருஞானசம்பந்தர் பவனி நடைபெற்றது. 
முத்துப்பந்தலில் பவனி வரும் திருஞானசம்பந்தர்
முத்துப்பந்தலில் பவனி வரும் திருஞானசம்பந்தர்
Published on
Updated on
2 min read

கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருஞானசம்பந்தர் பவனி நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார். காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்பந்தருக்கு முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன் நந்தியை விலக கட்டளையிட்ட தலமும் ஆகும்  

இத்தகைய சிறப்புபெற்ற தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் தேதியில் புராண வரலாற்றுப்படி திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்க கொடிய வெயிலில் வருவது கண்டு பொறுக்க முடியாமல் தேனுபுரீஸ்வரர் தனது பூத கணங்களை அனுப்பி திருஞான சம்பந்தரை வெயில் அவர் மேலே படாவண்ணம் முத்து பந்தல் அமைத்து அதன் கீழ் அழைத்து வர கட்டளையிட்டதுடன் அவ்வாறு அவர் வரும் அழகை தான் காண வேண்டும் என்பதற்காக தன் எதிரில் உள்ள நந்தியம்பெருமானை சற்று விலகி இருக்குமாறும் கட்டளையிட்டதால் இத்தலத்தில் நந்தியம்பெருமான் இறைவனுக்கு நேரே இல்லாமல் சற்று விலகியே இருப்பதை இன்றும் காணலாம்.  இவ்விழாவை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் நாள் இவ்விழா நடைபெறும்.  

ஆனி மாத முதல் நாளான இன்று, இவ்விழாவை முன்னிட்டு  திருஞானசம்பந்தர், பட்டீஸ்வரம் திருமடாலயத்தில் இருந்து திருமேற்றழிகை அருள்மிகு கைலாசநாதசுவாமி கோயிலுக்கு அழகிய முத்துப்பல்லக்கில் எழுந்தருளி பின்னர் அங்கிருந்து திருசக்திமுற்றம் அருள்மிகு சக்திவனேஸ்வரசுவாமி கோயிலுக்கு வந்து பின்னர் அங்கிருந்து அழகிய முத்துப்பந்தலில் அடியார்கள் புடைசூழ தேனுபுரீஸ்வர சுவாமியை தரிசிக்க செல்லும் வைபவமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சுமார் 24 அடி உயரமும், சுமார் 36 அடி நீளமும் 3 டன் எடையும் கொண்ட அழகிய முத்துப்பல்லக்கினை நூற்று இருபதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து வந்தது மக்கள் கடலில் கப்பல் மிதந்து வந்தது போல காண்போரை பக்தி பரவசப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு முத்துப்பல்லக்கில் பவனி வந்த திருஞானசம்பந்தரை வழிபாடு செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.